[X] Close

கருணாநிதி இருந்த போதே ஒன்றும் செய்ய முடியவில்லை; ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்: முதல்வர் கடும் சாடல்


chief-minister-speech-about-dmk

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 10:44 am
  • அ+ அ-

கருணாநிதி இருந்த போதே ஒன்றும் செய்ய முடியவில்லை; ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்கத்தின் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா சேலம் வீரபாண்டியை அடுத்த பூலாவரியில் நேற்று நடைபெற்றது. 

இதில் எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள்செம்மலை, மனோன்மணி, வெங்கடாசலம், ராஜா, சின்னதம்பி மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின்போது அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இந்தக் கட்சி இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டார் திமுகவின் அப்போதைய தலைவர். ஆனால், ஜெயலலிதா தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, பிரிந்த கட்சியை மீண்டும் ஒன்றாக்கினார். திமுக என்ற எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்கொண்ட ஜெயலலிதா அவற்றை மக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் துணை கொண்டு சந்தித்து முறியடித்து 6 முறை தமிழகத்தின் முதல்வராகி பதினைந்தரை ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருக்கு வாரிசுகள் கிடையாது, நாம்தான் வாரிசு.

யார் சிறப்பாக செயல்படுகின்றனர், யார் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்கின்றனர், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்று கண்டறிந்து அவர்களுக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் பதவிகளை வழங்கி னர்.

அவர்களது ஆட்சியின்போது ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் கூட எம்எல்ஏ, எம்பி என பல்வேறு பதவிகளுக்கு வர முடிந்தது. இதுபோன்ற நிலையை திமுகவில் பார்க்க முடியாது. அதிமுகவில் இதுவரைக்கும் 1.20 கோடி தொண்டர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் 30 லட்சம் பேர் சேர உள்ளனர்.

கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார். நீங்கள் எங்களை விரட்டப் பார்க்கிறீர்கள், ஒன்றும் நடக்காது.

வேளாண்மைத் துறையில் தொடர்ந்து க்ரிஷ் கர்மாண் விருதை பெற்றுக் கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மையை செயல்படுத்தி எங்கெங்கெல்லாம் நீர் கிடைக்கிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யவும் ஓடை மற்றும் நதிகளில் தடுப்பணை கட்டுவதற்கும் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். பருவமழைக் காலங்களில் பெய்கின்ற மழைநீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் உயர்வதற்கு குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 2-வது கட்டமாக ரூ.328 கோடியில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக தமிழகத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஊழல், ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டம் ஊழல் நிறைந்ததாக இருந்ததால் அது நிறுத்தப்பட்டது. புதிய வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனால், சென்னை மக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படு கிறது.

எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு இருந்தால், அந்த வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் விசாரணை, ஸ்டாலின் மீதுதான் வந்தது. திமுக-வில் உள்ள 11 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவற்றை தனி நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close