[X] Close

கலைஞரால் ‘இந்திரஜித்’, ‘வீர அபிமன்யு’ எனப் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி: மு.க.ஸ்டாலின் உருக்கம்


stalin-speech-about-paruthi-demise

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 11:36 am
  • அ+ அ-

கலைஞரால் ‘இந்திரஜித்’, ‘வீர அபிமன்யு’ எனப் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி என்று மு.க.ஸ்டாலின் உருக்கமாக குறிப்பிட்டார்

முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று (அக்.13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 58. தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. திமுகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர், 2013-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதற்குப் பிறகு அதிமுக-விலிருந்தும் நீக்கப்பட்டார்.

பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

அருமை நண்பர் பரிதி இளம்வழுதி அவர்களுடைய மறைவு ஒரு மிகப்பெரிய துயரத்தை எனக்கு மட்டுமன்றி, திமுகவுக்கும் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. காரணம், திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இளைஞர் அணி தொடங்கிய நேரத்தில் அவர் ஆரம்ப காலத்திலிருந்து என்னோடு இருந்து வளர்வதற்கு துணை நின்றவர். 

சிறு வயதிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, என்னோடு நெருங்கி பழகி கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு என்னோடு சிறைக்கு வந்தவர் நண்பர் பரிதி இளம்வழுதி அவர்கள். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்திலும் அவரைத் தேர்ந்தெடுத்த தொகுதியிலும் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை எடுத்தவர் பரிதி இளம்வழுதி.

அதுமட்டுமன்றி, தன்னந்தனியாக ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர். திமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் துணை சபாநாயகராக, செய்தித்துறை அமைச்சராக பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர். தலைவர் கலைஞர் அவர்களால் இந்திரஜித் என்றும், வீர அபிமன்யு என்றும் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி. 

சில நேரங்களில் அரசியல் சூழ்நிலைக் காரணமாக அல்லது குடும்ப சூழ்நிலைக் காரணமாக தடுமாறுகிற நேரத்தில் கூட தலைவர் கலைஞர் அவர் மீது வைத்திருந்த பாசத்தை, அன்பை என்றும் மறந்துவிட மாட்டோம். பரிதி இளம்வழுதியை செல்லப்பிள்ளையாக தலைவர் கலைஞர் வைத்திருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடக்கூடிய குடும்பத்தினருக்கு திமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close