[X] Close

திமுகவினரின் கிண்டலால், அகற்றப்பட்ட உதயநிதி பிளக்ஸ் போர்டு!


flex-board-removed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Mar, 2018 15:54 pm
  • அ+ அ-

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறது திமுக.வருகிற 19ம் தேதி (திங்கட்கிழமை) மதுரையில் நடைபெறும் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு அவர்தான் கதாநாயகன்.

அந்தக்கூட்டத்தில் பங்கேற்று, கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார் உதயநிதி என்று அறிவித்தது திமுக. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்திய அதே ஒத்தக்கடை மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், மதுரை திமுகவினர் அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பதுடன், பிளக்ஸ் பேனர்களும் வைத்தனர்.

அதில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கும், ஒத்தக்கடைக்கும் இடையே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

“யா.ஒத்தக்கடைக்கு வருகை தரும் மூன்றாம் கலைஞரே வருக! வருக!” என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்ததே பரபரப்புக்கு காரணம். திமுகவில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று மாற்றுக்கட்சியினர் கூட இதைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால், சமூக வலைத்தளத்தில் திமுகவினரே இதுகுறித்து கடுமையாக விமர்சித்தார்கள்.
 
“இரண்டாம் ஸ்டாலின் என்று கூட சொல்ல அரசியல் தகுதி பெறாதவர் உதயநிதி... ஸ்டாலினின் அரசியல் பயணமும் நெடிய அனுபவம் கொண்டது. கலைஞரின் அரசியல் ஞானத்தின் பாதியை கூட ஸ்டாலினுக்கு சொல்ல முடியாது. அதில் 5% கூட இல்லாதவர் உதயநிதி. இவர் மூன்றாம் கலைஞராம். எரிச்சல் வருமா வராதா?” என்று கேட்டிருந்தார் ஆனந்தகுமார் சித்தன் என்ற திமுக பதிவர். 

உதயநிதி தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மூன்றாம் கலைஞருடன், நான்காம் கலைஞர்” என்று கேலி செய்திருந்தார் வேல்குமார். “உதயநிதியை முன்னிறுத்த வேண்டிய தேவை என்ன?” என்று கோபமாகக் கேட்டார்கள் சிலர்.

“தளபதி உதயநிதி உருவாக்கப்பட்ட தலைவர் அல்ல, தலைவருக்கான தகுதிக்கு தன்னை பொருத்திக்கொண்டவர். 2018 ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டண உயர்வுக்கெல்லாம் தெருவில் இறங்கி போராடியவர், இது வரலாறு- & 2045 ல் சிலர் இணையத்தில் பதிவிடப்படப்போகும் ஸ்டேட்டஸ் இப்படித்தான் இருக்கும்” என்று வாசுகி பாஸ்கர் கேலி செய்திருந்தார்.

இதேபோல வாட்ஸ் அப்பிலும் விதவிதமாக கிண்டல், கேலிகள் பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேனரை அகற்றுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அந்தப் பேனரை வைத்த மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏபிவி.பாலுவே அதை அகற்றிவிட்டார். இதுபோன்ற வாசகர்களைத் தவிர்க்குமாறு உதயநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

கே.கே.மகேஷ்

இதப் பாத்தீங்களா? : கஸ்தூரியின் கலகல பேட்டி!

 

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close