[X] Close

ஊடகங்களுக்கு கட்டளை போடவே 200 பேர் கொண்ட குழு!- முரசொலி தலையங்கத்தில் பளீர்


murasoli-editorial-slams-bjp

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Oct, 2018 11:06 am
  • அ+ அ-

பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் எவ்விதம் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதை ஆய்வு செய்து வழிமுறைப் படுத்துவதற்கென்றே, 200 பேர் கொண்ட குழு ஒன்றை வைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அந்தக் குழுவினரின் ஆலோசனைப்படி, ஊடகங்களுக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என இந்தியாவில் ஊடகச் சுதந்திர நிலை குறித்து முரசொலி நாளிதழின் தலையங்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவு பின்வருமாறு:

உலக நாடுகளில் ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்து, 2017 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஊடகச் சுதந்திரக் குறியீடு எண்கள் (Press Freedom Index) மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 8.59 புள்ளிகள் பெற்று, பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்து நெதர்லாந்து மற்றும் நார்வே நாடுகள் இருக்கின்றன. பிரிட்டன் 38 -ஆவது இடத்திலும், அமெரிக்கா 41 -ஆவது இடத்திலும் உள்ளன. நமது இந்தியா எங்கே இருக்கிறது என்று பார்த்தால், 133 -ஆவது இடத்தில், ஊடகச் சுதந்திரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக - கருத்துச் சுதந்திரம் காப்போரின் கண்களைக் குத்துவதைப் போல, உள்ளது.

இப்படி மிக மோசமாக இருப்பதற்கு, ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு எனினும், அண்மைக் கால எடுத்துக்காட்டு ஏதேனும் உண்டா என்றால்; அண்ணல் காந்தி அடிகளின் 150-ஆவது பிறந்த நாளன்று, திரிபுராவில் பா.ஜ.க. அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் “தேசர் கதா” நாளேட்டினைச் சுட்டிக் காட்டலாம். நாற்பதாண்டு காலப் பின்னணி கொண்டிருக்கும் இந்த நாளேடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்க மொழி நாளேடாக, திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நாளேடாக, திரிபுராவில் பெரும்பான்மையாக வாழும் மலைவாழ் மக்களின் மனக் குரலாக இருந்து வருகிறது.

திரிபுராவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி அரசின் வாளாகவும், கேடயமாகவும் விளங்கி வந்த “தேசர் கதா” மீது, மோசடியான தேர்தல் வெற்றியைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பா.ஜ.க., உள்ளத்தில் உரமிட்டு வளர்த்து வந்த குரோத உணர்வைக் கொட்டி விட்டது. “தேசர் கதா” தடை செய்யப்பட்டிருப்பதற்கு, பத்திரிகையாளர் அமைப்புகள் பலவும் பலத்த கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இதற்கெல்லாமா பா.ஜ.க. பயப்படப் போகிறது? பாசிச பா.ஜ.க.வுக்கு, ஊடகக் கருத்துச் சுதந்திரம் என்றாலே எட்டிக்காய்தானே! ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை - விடுதலைக்குப்பின், மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை உறுதிப் படுத்த அனைவர்க்கும் வாக்குரிமையுடன் கூடிய பொதுத் தேர்தல் - தேர்தல் வெற்றிக்குப் பின்னர், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறியதைப் போல, சர்வாதிகாரம் - பாசிச. நாசிசக் கொடுங்கோல் என்பதுதான் சங்பரிவாரங்களின் சாகச் சூத்திரம்!

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறப் போவதையொட்டி, ஊடகச் சுதந்திரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் எடுத்தேன் - கவிழ்த்தேன் பாணி பொருளாதார முடிவுகளுக்கும், பா.ஜ.க.வின் வன்முறை ரீதியிலான இந்து தேசியத்திற்கும் ஏற்பட்டிருக்கும் கடுமையான எதிர்ப்பே அதற்குக் காரணமாகும்.

பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் எவ்விதம் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதை ஆய்வு செய்து வழிமுறைப் படுத்துவதற்கென்றே, 200 பேர் கொண்ட குழு ஒன்றை வைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அந்தக் குழுவினரின் ஆலோசனைப்படி, ஊடகங்களுக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பிக்கப் படுகின்றன.

ஏ.பி.ப்பி. செய்தித் தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் பாஜ்பாயை, மத்திய பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்யும் எந்தத் தொகுப்பிலும் பிரதமர் மோடியின் பெயரை இணைக்கக் கூடாது என்று அந்தத் தொலைக்காட்சியின் உரிமையாளர் - முதன்மைச் செய்தி ஆசிரியர் அறிவுறுத்தியிருந்தார். அந்த அறிவுரையை மீறியதற்காக, பாஜ்பாய் அந்தத் தொலைக்காட்சியிலிருந்தே வெளியேற்றப்பட்டார்.

மத்திய பா.ஜ.க. அரசின் வழிமுறைகளுக்கு ஒத்துவராத ஊடகங்களுக்கு விளம்பரங்கள் நிறுத்தப்படுகின்றன. . மோடி, பொறுப்பேற்றதற்குப் பின், பசு பாதுகாப்புக் குழுவினர் என்ற போர்வையில், இஸ்லாமியர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் விபரங்களை வெளிச்சம் போட்டு வெளி உலகுக்குக் காட்டியதற்காக, “இந்துஸ்தான் டைம்ஸ்” ஆசிரியர் பாபிகோஷ், ராஜிநாமா செய்துவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மோடியின் பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்யும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என்ன நடக்கும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டுதான் - என்.டி.டி.வி.யின் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரனாய்ராயின் டெல்லி மற்றும் டேராடூன் இல்லங்களில் சி.பி.ஐ. அண்மையில் நடத்திய “ரெய்டு”.

மிகப் பெரியதும், விரிந்து பரந்ததுமான ஊடகத்துறை இந்தியாவில் செயலாக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ஊடகவியலாளர்கள், பிரதமர் மோடியையோ அவரது நிர்வாகத்தையோ விமர்சித்தால், தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று 'ராய்ட்டர்ஸ்' சர்வதேசச் செய்தி நிறுவனம் அண்மையில் கருத்து தெரிவித்திருக்கிறது. மோடி அரசும், ஊடகத் துறையும், பூனையும் - எலியும் போல, விரட்டப்பட்டும் மிரண்டும் இருந்து வருகின்றன.

"பணிந்து போகும் ஊடகமே தேவை என்று மோடி அரசு கருதுகிறது. ஊடகத்தினர்க்கு அழுத்தம் தருவதும், அவர்களைச் சபலங்களுக்கு ஆளாக்குவதுமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது” என்று 'தி ஸ்டேட்ஸ்மேன்' இதழின் முன்னாள் ஆசிரியர் நிஹல்சிங் விளக்கியிருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளரும், பிரிட்டன் நாட்டில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவரும், அண்மையில் இயற்கை எய்தியவருமான குல்தீப் நாயர், அவசர நிலையைப் பிரகடனம் செய்யாமல், அதுபோன்றதொரு சூழ்நிலையை மத்திய பா.ஜ.க. அரசு ஊடகத்தினரிடையே உருவாக்கி வருகிறது என்று இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், வேதனையுடன் சொன்னார்.

இந்தியாவின் ஊடகத்துறையில் ஏராளமான எதிர்மறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் இருள் சூழ்ந்த இன்றைய நிலையில், உலகப் பத்திரிகைச் சுதந்திர நாளான மே மாதம் 3 ஆம் நாளன்று, பிரதமர் மோடி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால், “பத்திரிகைச் சுதந்திரம்தான், ஜனநாயகத்தைப் பலப்படுத்தக் கூடியது. பத்திரிகைச் சுதந்திரத்தை ஆதரித்துப் பாதுகாப்பதென நாம் அனைவரும் உறுதி மேற்கொள்வோம், நமது சமூகம் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டுமானால், வேறுபாடான ஏராளமான கருத்துகள் வெளிவர வேண்டும்” என்று “உபன்யாசம்' செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, வேதாளம் ஓதும் வேதம் - என்பதா அல்லது இந்தப் பூனையும் பால் குடிக்குமா - எனக் கேட்பதா?

இந்தப் பதிவை திமுகவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close