[X] Close

ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி.தினகரன் கருத்து


ttvdinakaran-speech-at-trichy

  • kamadenu
  • Posted: 15 Sep, 2018 11:21 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தாலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: அதிமுக அமைச்சர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். பயத்தில் தேவையற்ற பேச்சுகளை அவர்கள் பேசி வருகின்றனர். இதிலிருந்தே அவர்கள் தோல்வியடையப் போவது தெரிந்துவிட்டது. டெபாசிட் வாங்குவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அமமுகதான் வெற்றி பெறும்.

நான் ஏற்கெனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எனது கட்சியின் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பது சட்ட உரிமை. தேர்தல் ஆணையம் நிச்சயம் கொடுக்கும். தற்போதுள்ள சூழலில் அதிமுகவை பாஜக கைவிட்டதாக தெரிகிறது. ஆனால், பாஜகவினர் திமுகவை நோக்கி சென்று கொண்டுள்ளனரா என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் மின்வெட்டு வராது என அமைச்சர் தங்கமணி நேற்றுவரை கூறிவந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தற்போது நிலக்கரி இருப்பு இல்லை எனக்கூறி, உடனே அனுப்பிவைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளார். டெல்டா பகுதிகளில் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் எதையும் தூர் வாராமல், தூர் வாரியதாக பில் எழுதி, அந்த பணமெல்லாம் கடலுக்குச் சென்றுவிட்ட நிலையில் கடைமடைக்கு எப்படி காவிரி நீர் செல்லும்?. கர்நாடகாவில் இருந்து வந்த தண்ணீர் முழுவதையும் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேராக கடலுக்கு கொண்டு சென்றுவிட்டனர். அதேசமயம், டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தந்ததாக அவர்களே விழா எடுத்துக் கொள்கின்றனர்.

அமமுகவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ஏற்றுக்கொள்ள இவர்கள் என்ன தேர்தல் ஆணையமா? ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து பேரம் பேசியும் ஒன்றும் நடக்கவில்லை. இப்போது திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும், அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேரப் போவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதலில் அவர், கோவில்பட்டி தொகுதிக்குள் காரில் தனியாகச் சென்று மக்களைச் சந்தித்துவிட்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டால், தங்க தமிழ்ச்செல்வனை நானே அவர்களது கட்சிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close