[X] Close
 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் பணிகளை தொடங்கிய கட்சிகள்: சுவர் விளம்பரங்களை எழுதுவதில் மும்முரம்


thiruvaruru-election-work-begins

திருவாரூர் பகுதி சுவர்களில் வரையப்பட்டுள்ள இரட்டைஇலை, உதயசூரியன் மற்றும் குக்கர் சின்னங்கள்.

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 09:42 am
  • அ+ அ-

 

எஸ்.கோபாலகிருஷ்ணன்

கருணாநிதியின் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வுள்ளது. இதற்கு முன்னதாகவே, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தாங்கள் தயா ராகவே இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் சுவர் விளம்பரங்களை எழுதுவது, பூத் கமிட்டி அமைப்பது என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டி யிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பன்னீர்செல்வம் 53 ஆயிரத்து 107 வாக்குகளும், மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 13 ஆயிரத்து 158 வாக்குகளும் பெற்றனர்.

தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி யில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவை ஆதரிக்கும் நிலைப் பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கிய தோடு, அதிமுகவை வீழ்த்துவதில் திமுகவை மிஞ்ச வேண்டும் என நினைக்கின்றனர். அதன் வெளிப் பாடாக அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தை எழுதத் தொடங் கியபோதே அமமுகவினரும் குக்கர் சின்னத்தை வரைந்து தேர் தல் பணியை தொடங்கி விட்டனர்.

தற்போது சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு இடம் பிடிப்பதில் அதிமுகவும், அமமுகவும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. இதனிடையே கடந்த 9-ம் தேதியில் இருந்து உதயசூரியன் சின்னத்தை வரைந்து தேர்தல் பணியை திமுகவும் தொடங்கி விட்டது. திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி முழுமைக்கும் சுவர்களில் தற்போது இரட்டை இலை, உதயசூரியன், குக்கர் சின்னங்கள் வரையப்பட்டு வருகின்றன.

திருவாரூர் தொகுதியில் திரு வாரூர், கூத்தாநல்லூர் நகராட்சி கள், கொரடாச்சேரி பேரூராட்சி, திருவாரூர், குடவாசல், நீடாமங்கலம் தாலுகா பகுதிகளை உள்ளடக்கிய 82 ஊராட்சிகளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். 158 மையங்களில் 303 வாக்குச் சாவடிகள் உள்ளன.

அதனடிப்படையில் 60 வாக் காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் நியமித்துள்ளன.

தற்போது தேர்தலில் வெற்றி பெறுவது இறுதி இலக்கு என்றாலும் தேர்தல் பணியில் யார் முந்திச் செல்பவர் என்ற பதற்றத்தோடு திருவாரூர் மாவட்டத்தில் இம் மூன்று கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.

இந்த நடவடிக்கைகளை பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close