[X] Close
 

ஒரே மேடையில் விவாதிக்க ரெடி! - அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்


rsbharathi-challange

ஆர்.எஸ்.பாரதி

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 10:24 am
  • அ+ அ-

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது அந்தத் துறையில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாக, திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் வேலுமணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு, அமைச்சர் வேலுமணி, எங்களுடைய இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடவேண்டும், எங்கள் கட்சியை அழித்துவிடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முயன்று வருகிறார். இப்போது முதல்வர், துணைமுதல்வர் மீது என புகார் கொடுத்து வருகிறார். என் மீதும் ஊழல் புகார் கொடுத்துள்ளார்.

உள்ளாட்சித்துறையைத்தான் திமுக ஆட்சியில் ஸ்டாலின் வைத்திருந்தார். அவர் செயல்பட்டதைவிட மூன்று மடங்கு, பத்து மடங்கு நான் சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்யவேண்டும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். தாராளமாக ராஜினாமா செய்கிறேன். தயாராக இருக்கிறேன். அதேபோல, தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். அந்தப் பதவியை துரைமுருகனுக்கோ அவரின் மூத்த சகோதரரான அழகிரிக்கோ தந்துவிட்டு வரட்டும். நானும் உடனே என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன்.

பிறகு என் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலை விட்டே ஒதுங்கவும் தயாராக இருக்கிறேன் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல் செய்தது உண்மை. இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஊழலை நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறார். ஒரே மேடையில் நின்று விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு வேலுமணி சம்மதமா? தைரியம் இருக்கிறதா?

வேலுமணிக்கு தைரியம் இருந்தால், அவரே ஒரு இடத்தைத் தேர்வு செய்து, சொல்லட்டும். அப்போது அங்கே சென்று ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close