[X] Close

திருப்பரங்குன்றத்தில் திமுகவே எங்கள் முதல் எதிரி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


rpudayakumar-speech-about-thiruparangundram-election

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 11:07 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவே எங்கள் முதல் எதிரி என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரச்சாரக் குழு பயிற்சிக் கூட்டம் மதுரை பாண்டி கோயில் அருகே நேற்று நடந்தது. 3 ஆயிரம் இளைஞர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.எம்.சீனிவேல் 22 ஆயிரம் வாக்குகள், ஏ.கே. போஸ் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வரும் இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இத்தொகுதியில் அதிமுகவுக்கு 1 லட்சம் வாக்குகள் உள்ளன. எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் மக்கள் எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கன்குளத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பிரச்சாரம் தொடங்குகிறது. இதில் தொகுதியில் உள்ள 295 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தலா 10 பேர் உட்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் தொகுதி முழுவதும் அதிமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வர். சைக்கிள், தெருமுனை, திண்ணைப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபடுவர்,

அமமுக நிர்வாகி தங்கதமிழ்ச்செல்வன் தேனிக்காரர். அவர் அதிமுகவுக்கு சவால் விடுக்கிறார்.

நாங்கள் மதுரைக்காரர்கள். எங்கள் மாவட்டத்தில் தேர்தல் நடக்கிறது. இங்கு இருப்பவர்கள் சவால் விடட்டும். உள்ளூரில் அமமுகவுக்கு சவால்விட ஆள் இல்லாததால் தங்கதமிழ்ச்செல்வன் விடுகிறாரா.

திமுக கடந்த தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள்வரை இத்தொகுதியில் பெற்றுள்ளது. அந்த கட்சிதான் எங்களுக்கு பிரதான எதிரி. இத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி. அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட ரீதியாக பிரச்சினையை சந்திப்பார் என்றார்.

நாளை பூத் கமிட்டி ஆலோசனை

இது குறித்து வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 95, 96 வார்டுகளின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாளை (செப்.10) காலை 10 மணிக்கு நடைபெறும். திருப்பரங்குன்றம் மரகதம் மகாலில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ பங்கேற்கின்றனர்.

எம்.பி., எம்எல்ஏ.க்கள், கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close