பேனரில் ஃபோட்டோ!- கொதித்தெழுந்த தொண்டர்; வாக்கு கொடுத்த உதயநிதி

கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதியின் படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் தன்னை திமுகவின் தொண்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நெட்டிசன் ஒருவர் உதயநிதியை மிகக் கடுமையாக சாடியுள்ளார். மூத்த தலைவர்கள் மேடையில் இருக்க பேனரில் உங்கள் புகைப்படம் வர என்ன தகுதி இருக்கிறது? என காட்டமாகக் கேட்டிருந்தார்.
"ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
உங்களுக்கு தோணலையா?
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?"
இதுதான் சாமுராய் என்ற பெயரில் அந்த நெட்டிசன் பதிவிட்டிருந்த ட்வீட்.
இதற்கு ட்விட்டரிலேயே உதயநிதி பதிலளித்திருக்கிறார். "தவறு! மீண்டும் நடக்காது!" என வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இருந்தாலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்று ட்விட்டராட்டிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
திமுக செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி அவ்வப்போது அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். திமுக பிரமுகர்கள் இல்ல நிகழ்ச்சியிலும்கூட கலந்து கொள்கிறார்.
நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன். என்னை திமுக-காரனாகப் பாருங்கள். இனி அடிக்கடி என்னை பொது மேடைகளில் போராட்டக் களங்களில் பார்க்கலாம் என்று பேசினார்.
தற்போது ஸ்டாலின் தலைவரானப் பிறகு உதயநிதியின் படம் தலைவர்களுக்கு ஈடாக பேனரில் வைக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.