[X] Close

இடைத்தேர்தல் தோல்வி; சின்னத்தட்டு! கலைஞரின் சிலேடைக் குறும்பு


tanjore-thattu-kalaingar

கலைஞர் மு.கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Aug, 2018 14:08 pm
  • அ+ அ-

திருவாரூரில் உள்ள பள்ளியில் ஓர் விழா. அந்த விழாவுக்கு தலைமையேற்றுப் பேச கலைஞர் கருணாநிதியை அழைக்க, அவரும் ஒத்துக்கொண்டார்.

அதற்கு முன்னதாக தஞ்சாவூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகள், பள்ளி விழாவின் நாளன்று வெளியாகின.

அதாவது காலையில் தேர்தல் முடிவு. மாலையில் விழா. சொன்னது போலவே, மாலையில் பள்ளிவிழாவுக்கு வந்துவிட்டார் கலைஞர் கருணாநிதி.

ஆனால் அங்கே விழாக்குழுவினருக்கும் விழாவுக்கு வந்தவர்களுக்கும் கொஞ்சம் வாட்டம். வருத்தம்.

தஞ்சாவூர் இடைத்தேர்தலில், திமுக தோல்வியைத் தழுவியிருந்தது. இந்த நிலையில், பள்ளிவிழாவில் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டார்.

முன்னதாக, பலரும் பேசினார்கள். கலைஞரை வரவேற்றுப் பேசினார்கள். கலைஞர் பேசுவதற்கு முன்னதாக, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில், எந்த விழா எடுத்தாலும் நினைவுப்பரிசாக, புகழ்பெற்ற தஞ்சாவூர்த்தட்டு தருவது வழக்கம். அதேபோல் கலைஞருக்கும் தஞ்சாவூர்த்தட்டினை, நினைவுப் பரிசாக வழங்கினார்கள்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு, கலைஞர் பேசுவதற்காக மைக் முன்னே வந்து நின்றார். கையில் தஞ்சாவூர்த்தட்டும் இருந்தது.

அப்போது அவர், ‘விழாவுக்கு வந்திருக்கும் எனக்கு நினைவுப்பரிசு தந்தார்கள். தஞ்சாவூர்த் தட்டு. ஆனால் சின்னத் தட்டாக தந்திருக்கிறார்கள்’ என்று தட்டினைத் தூக்கிக் காட்டினார்.

கலைஞர் தொடர்ந்து பேசினார்.

‘இதிலொன்றும் வருத்தமில்லை எனக்கு. ‘சின்னத்தட்டு’தான் என்பதால் (இடைத்தேர்தல் தோல்வியை சிறிய அளவிலான தட்டு எனும் பொருளில் சொன்னார்) இங்கே, விழாவில் அதைநினைவுகூரும் வகையில், எனக்கு சின்னத்தட்டு வழங்கியிருக்கிறார்கள் போல!’ என்று கலைஞர் பேச, எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். கைத்தட்டியபடி சகஜநிலைக்குத் திரும்பினார்கள்.

தோற்றுப்போனதையெல்லாம் மறந்துவிட்டு, அதை ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், ‘இது இடைத்தேர்தல்தானே. சின்னத்தட்டுதானே. பார்த்துக்கொள்ளலாம்’ எனும் தொனியில் பேசிய நகைச்சுவை கலந்த கலைஞரின் பேச்சு, அவரின் உறுதியையும் உத்வேகத்தையும் பறைசாற்றுவதாக இருந்ததாக இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சோழ தேசத்து உடன்பிறப்புகள்!

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close