[X] Close

கலைஞரின் தீக்கங்கு கண்ணகியின் குரலில்..!


poombukar-kannagi

கலைஞர் கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Aug, 2018 15:35 pm
  • அ+ அ-

பூம்புகார். தமிழ்த் திரையுலகில் மறக்கவே முடியாத படம். கலைஞரின் வசனம் ஒவ்வொன்றும் குத்தீட்டியெனப் பாயும். பகைவர்களை மேயும். சிலம்பின் அழகையும் சொல்லும். கண்ணகியின் மாண்பையும் பாடும்.

மன்னனின் நீதி தவறியதைச்சுட்டிக்காட்டும். சுள்ளென்று கொட்டும். சுவைபடவும் பேசும் என்பதானவை கலைஞரின் வசனங்கள்.

அந்த க்ளைமாக்ஸ் காட்சி, மொத்தத் திரையரங்கமும் அமைதியும் இறுக்கமுமாகியிருக்கும். கண்ணகியின் கனல் பேச்சுக்களில் பிரமித்துப் போகும்.

’’உனது கொடுங்கோல் அளித்த அவசரத் தீர்ப்புக்கு ஆளாகி, கொலையுண்ட கோவலனின் மனைவி கண்ணகி நான் என்பதையும் அறிந்திடுக அரசே!’’ என்று அவையில் அறிமுகமாவாள் கண்ணகி.  

‘ஓ... கோவலனின் மனைவி. சிலம்பு திருடிய கள்வனின் மனைவி’ என்று மன்னன் சொல்ல...

’போதும்... யாகாவாராயினும் நா காக்க மன்னா. நா காக்க. நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழியப் பாண்டியனே. உமது நாட்டில் எதற்குப் பெயர் நீதி? நல்லான் வகுத்ததோ நீதி? அல்ல அல்ல. வல்லான் வகுத்ததே நீதி.

கொற்றவனே! எண்ணிப்பார். பொதுமண்டபத்தில் விசாரிக்கவேண்டிய வழக்கு, கோயில் மண்டபத்தில் முடிவானேன். சிந்தியுங்கள். நன்றாகச் சிந்தியுங்கள். குற்றம்சாட்டப்பட்டவரின் மறுப்புகளுக்கு மதிப்புத் தராமல், கொலைவாளின் வேலை அவ்வளவு அவசரமாக நடைபெறுவானேன்.

இதற்குப் பெயரா நீதி? இதற்குப் பெயரா நேர்மை? இதற்குப் பெயரா நியாயம்? இதற்குப் பெயரா அரசு? இதற்குப் பெயரா அறங்காக்கும் மன்னன்?’ என்று பொறிந்து தள்ளிவிடுவாள் கண்ணகி.

உடனே மன்னன், ’உன் கணவனின் கையில் இருந்தது கோப்பெருந்தேவியின் சிலம்பு’ என்பான்.  

ஆவேசமான கண்ணகி, ‘அது கோப்பெருந்தேவியின் சிலம்பில்லை. கோவலன் தேவியாம் கண்ணகியின் சிலம்பு’

‘நம்ப முடியாது என்னால்”

‘நீ யார் நம்புவதற்கு. உன்னை யார் நம்பச் சொல்லுகிறார்கள். உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான். குற்றவாளி நீ’ என்று குட்டுவைத்து சூடும் வைத்து இடித்துரைப்பாள்.

‘நான் குற்றவாளியா?’

‘ஆம். நீ குற்றவாளி. அதனால் தீர்ப்பளிக்கும் உரிமை உன் கையில் இல்லை. இதோ இருக்கிறார்களே... மேன்மை மிக்க மனிதர்கள். இவர்கள் சொல்லட்டும் நல்ல தீர்ப்பு.

  ஆதாரம். இதோ... இந்தச் சிலம்பு. இதற்கு இணையான மற்றொரு சிலம்பைத்தான் என் மணவாளன் விற்க வந்தார். மாபாவிகள் அவரைக் கொன்று குவித்துவிட்டார்கள்.’

‘அப்படியானால், தேவி அணிந்திருக்கும் சிலம்பு?

‘அதில் ஒன்று என்னுடையது’

‘அதற்கு அடையாளம்’

’அடையாளம் வேண்டுமா? ஆயிரம் கேள்விகள் என்னைக் கேட்டு   உன்னைக் குற்றமற்றவாக்கிக் கொள்ளத் துடிக்கிறாயே. இப்படி ஒரு கேள்வி என் அத்தானைக் கேட்டிருந்தால், நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற பெயர் உனக்கு நிலைத்திருக்கும். என் அத்தானின் உயிரும் தங்கியிருக்குமே’ என்பார்.

உடனே அமைச்சர், ‘தேவி அணிந்திருப்பது உன்னுடைய சிலம்பு என்பதை நிரூபித்துக் காட்டுவாயா?’

’மன்னவா. உன்னுடைய மனைவியின் பழைய சிலம்பிலே உள்ள பரல்கள், முத்துக்களா, மாணிக்கங்களா?’

‘முத்துக்கள். அதுவும் கொற்கை முத்துக்கள்.’

‘என்னுடைய சிலம்பிலே உள்ளவை மாணிக்கப்பரல்கள்.’

’அப்படியா. எங்கே பார்க்கலாம்?’

தேவியிடம் வாங்கி உடைப்பார். ‘பார்த்தாயா முத்துப்பரல்களை’.

’ம்... அடுத்த சிலம்பு?’

’ஆ... மாணிக்கங்கள்’

‘மாணிக்கங்கள் அல்ல. ரத்தத்துளிகள். தர்மத்தின் கண்கள் வடிக்கின்ற ரத்தத்துளிகள். பாண்டியா. உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், இதோ... மற்றொரு சிலம்பு’ என்று தன் கையில் உள்ள சிலம்பை தரையிலடிப்பார்.

மாணிக்கங்கள். அதிர்ந்துபோவான் மன்னன்.

‘அமைச்சர்களே. அறம் கூறும் சான்றோர்களே. இதற்கென்ன பதில்? தலை தொங்கிவிட்டதா? நீதி கவிழ்ந்துவிட்டதா? வாய்மை அழிந்துவிட்டதா? நெடுஞ்செழிய மன்னனின் அறம், மரம், திறம் எல்லாம் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டதா?

ஏனிந்த வாட்டம்? தமிழகம் சிரிக்கிறது பாண்டியா, நீ தலைகுனிந்திருப்பதைப் பார்த்து. தமிழ்நாட்டு மறைநூல் திருக்குறள், கேலி பேசுகிறது பாண்டியா. உன் நீதி வழங்கும் செய்தி கேட்டு! ஆனைசேனை ஆயிரமாயிரம் எதிர்த்து எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து வழிநடத்தும் உன் வீரம் எங்கே? கம்பீரம் எங்கே? வெற்றித் திருப்பார்வை எங்கே? எங்கே? எங்கே?’ என ஆவேசம் பொங்கக் கேட்பாள் கண்ணகி.

கண்ணகியாக கண்கள் விரிய, தலைவிரிகோலமாய் நம் முன்னே கண்ணகியாகவே வந்து நின்று வாழ்ந்திருப்பார் விஜயகுமாரி.

அவர் பேசும் வசனங்களில், தீக்கங்குகளைச் செருகிக் கொடுத்திருப்பார் கலைஞர்.

காலம் கடந்தும் நிற்கிறாள் கண்ணகியும் அவளின் கற்பு நெறி தவறாத வசன வீச்சுகளும்! அதுதான் கலைஞர் சக்தி. அவர்தான் கலைஞர்!  

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close