[X] Close

மெரினாவில் அனுமதி வழங்கவேண்டும்! தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்


marina-thirumavalavan

கலைஞர் - திருமாவளவன்

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Aug, 2018 09:24 am
  • அ+ அ-

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவே கோபாலபுரம் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை மீண்டு ராஜாஜி ஹாலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ் மண்ணுக்கும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்குமாக வாழ்ந்து சகாப்தம் படைத்தவர் கலைஞர். இதற்கெல்லாம் மாநில உரிமை வெகு முக்கியம் என்பதை வலியுறுத்தி வந்தார்.

அப்போது மிசா எனும் நெருக்கடிக்கு ஆளாகாமல், அப்போதைய முதல்வர்கள் ஒதுங்கிய வேளையில், அதைக்கண்டெல்லாம் அஞ்சாமல், போராடினார் கலைஞர். அதனால் குடும்பத்தினரும் கட்சியினரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆனாலும் பின்வாங்கவில்லை அவர். மாநில சுயாட்சியைக் கட்டிக்காத்த தலைவர்.

1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால், திமுக மீது பழி சுமத்தப்பட்டது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு, நெருப்பாற்றில் நீச்சலடித்து, தமிழீழத்துக்காகப் போராடினார். இதை தேசிய அளவில் டெசோ எனும் அமைப்பாக உருவாக்கி, இது சர்வதேசப் பிரச்சினை என்று சொல்லி, தேசியத் தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, மதுரையில் மாநாடு நடத்தினார்.

அரசியல், சமூகம், இலக்கியம்  என அவர் பங்காற்றியது போல் எவரும் செயல்பட்டதாகத் தெரியவில்லை. இறுதி மூச்சு வரை போராடிக்கொண்டிருந்த ஒப்பற்ற தலைவர். இந்திய அரசு, அவரின் மறைவையொட்டி தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதாக அறிவித்துள்ளது. இந்த மோடி அரசுக்கு ஒரு வேண்டுகோள். கலைஞருக்கு பாரதரத்னா விருது கொடுத்து கெளரவிக்கவேண்டும்.

அதேபோல், அண்ணாவின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தவர் தலைவர் கலைஞர். பெரியாரின் பாராட்டுதல்களைப் பெற்றவர். எம்ஜிஆரின் இனிய நண்பர் கலைஞர். அப்பேர்ப்பட்டவருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் கொடுக்க தமிழக அரசு மறுப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். 50 ஆண்டுகாலம் கட்சியின் தலைவராக செயலாற்றியிருக்கிறார். கடந்த 80 ஆண்டு காலமாக தமிழக நலனுக்காகப் போராடியிருக்கிறார். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்கவேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close