[X] Close

கருணாநிதி நினைவலைகள் 2: சட்டப்பேரவையில் கருணாநிதியின் கன்னிப்பேச்சு


karunanithi-s-debut-speech-in-assembly

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 14:18 pm
  • அ+ அ-

சட்டப்பேரவையில் கருணாநிதி ஆற்றிய முதல் உரை விவசாயிகளுக்கானதாக அமைந்தது. கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் தனது முதல் உரை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு எழுதியிருப்பார்.

"சட்டமன்றத்தில் நுழைந்து முதன் முதலாக 4-5-57 அன்று கவர்னர் ஜான் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன். அதுதான் என்னுடைய முதல் சட்ட மன்றக் கன்னிப் பேச்சு. அன்று, விவாதத்தில் கலந்துகொண்டபோது, என்னுடைய சிந்தனையை, கவனத்தை, அவசிய உணர்வை, ஆட்கொண்டிருந்தது கவர்னர் உரையோ, சட்ட மன்றக் கட்டுத்திட்டங்களோ, ‘கன்னிப் பேச்சு’ ஆனதால் கவனமாகப் பேச வேண்டுமே என்பதோ அல்ல. என்னுடைய தொகுதியில் அப்போது நடைபெற்றுவந்த விவசாயிகள் பிரச்சினை ஒன்றுதான் என் கவனத்தை ஆட்கொண்டிருந்தது!

அந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது சட்ட மன்ற விவாத அந்தஸ்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் மேலோங்கியிருந்தது. ஆம்; நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நாளில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையும் ஆர்வமும் நான் முதன்முதலாக சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, என் குளித்தலைத் தொகுதியில் விவசாயப் பெருங்குடி மக்கள் - அத்தனை பேரும் ஆதிதிராவிடப் பெருங்குடி மக்கள் - பெருநிலச்சுவான்தாரர்களிடம் பட்ட பாட்டினையும், அனுபவித்த பசி-பட்டினிக் கொடுமைகளையும் கண்ணாரக் காண்பதற்குக் கிடைத்த அனுபவமே காரணமாகும்.

குளித்தலைத் தொகுதி பொதுவாகப் பிற்பட்ட பகுதியாக இருந்தாலும், அங்கு நிலச்சுவான்தார்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த நிலச்சுவான்தார்களுக்கு, விவ சாயிகள்-விவசாயக் கூலிகள் என்பவர்கள் பேரில் இருந்த துவேஷத்துக்கும் அலட்சியத்துக்கும் அப்போது பஞ்சமே இல்லை.

நங்கவரம் பண்ணை என்ற பெரு நிலக்கிழார் ஒருவருக்கு ஏராளமான நிலங்கள் உண்டு. அதிலும் மற்ற விவசாயப் பகுதிகளில் இல்லாத விசித்திரமான முறையாகக் ‘கையேர் வாரம்’, ‘மாட்டேர் வாரம்’ என்று சாகுபடியில் பங்கு பிரிக்கும் வார முறையும் அங்கு உண்டு.

நங்கவரம், திம்மாச்சிபுரம் நிலச்சுவான்தார்கள் தங்களிடமிருந்த விவசாயக் கூலிகளிடமும், பரம்பரையாக ஒரே நிலத்தில் பாடுபட்டு வயிறு வளர்த்து வந்த குத்தகைதாரர்களிடமும் தகராறும் பிணக்கும் செய்துகொண்டிருந்தனர். இது அந்தத் தொகுதியில் நான் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பிருந்தே புகைந்துகொண்டிருந்தது. களத்து மேட்டில் நெல்மணிக் குவியல்களையும், தங்கள் வீட்டில் புகையாத அடுப்புகளையும், தங்கள் மனைவி, மக்களுடைய ஒட்டிப்போன வயிறுகளையும் பார்த்துப் பார்த்து விவசாயப் பாட்டாளி மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர்.

அந்தத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் இதைத் தீர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதுவரையில் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் நான் செய்த முயற்சி எதுவும் பலனளிக்காமல் போயின. அன்று நான் கவர்னர் உரையின் பேரில் விவாதத்தில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, மற்ற எல்லாவற்றையும்விட நங்கவரம் விவசாயிகளின் பிரச்சினைதான் எனக்கு நினைவில் நின்றது.

அன்று நான் பேசியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை சட்ட மன்றத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்டபோதும் என் நினைவில் சுழன்றுகொண்டிருந்தது.

"இந்தப் பகுதிகளில் 'கையேர் வாரம்', 'மாட்டேர் வாரம்' என்று இரு வகையான விவசாயம் உண்டு. இந்த இருவகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தினர், சட்டங்களின் மூலம் பலனடையவில்லை என்பது மட்டுமல்ல, பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு நியாய வாரம் கிடையாது. அவர்கள் சட்டப்படி நியாய வாரம் பெற முடியாது… இந்தப் பெருமக்கள் வயிற்றிலோ பசிப் புயல் குமுறிக் கொண்டிருக்கிறது… சர்க்கார் எந்த வகையில் இவர்களுக்கு வாழ்வளிக்கப் போகிறது?” என்று நான் பேசிக்கொண்டே போனேன்.

எதிரே இருந்த சபாநாயகரோ அமைச்சர்களோ எனக்குத் தெரியவில்லை. நங்கவரம் களத்துமேடு, அங்கு யாருக்கும் பயன்படாமல் குவிந்திருக்கும் கதிர்மணிகள், அதனையே ஏக்கத்தோடு பார்த்துப் பசித்த வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொள்ளும் விவசாயப் பாட்டாளிகள், அவர்களுக்கும் நெற் கதிர்களுக்கும் இடையே வேலிபோல் காவல் காக்கும் காவல் துறையினர், வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே பெருமிதம் பொங்க விஷமச் சிரிப்புச் சிரிக்கும் நிலச்சுவான்தாரர்கள் - என் கண்முன் அப்போது தெரிந்தன, தெரிந்தனர். என்னுடைய கன்னிப் பேச்சு என் கண்ணீர்ப் பேச்சாக அமைந்தது.

எனக்கு அடுத்து, இரண்டொரு நாட்களுக்குப் பிறகு 6-5-57 அன்று முதன் முதலாகச் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எழுந்த அறிஞர் அண்ணா, நான் பேசியதைத் தொடர்ந்து, நிலச் சீர்திருத்தத்தைப் பற்றிய கருத்துக்களை மழை போல் பொழிந்தார். “உண்மையில் சர்க்காருக்கு நிலச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை இருக்குமானால், அவற்றை உடனடியாகச் சட்டமாக்குவதற்குத் தயங்குவானேன்? யாருக்காக இந்தச் சர்க்கார் பயப்படுகிறது? ‘நிலச் சீர்திருத்தம் செய்யப் போகிறோம்’ என்று பேசிக்கொண்டே காலம் தாழ்த்தி வருகிறது.

இதனை மறைப்பதற்கு ஒரு திரையாகவே வினோபாவையும் அவருடைய பூதான இயக்கத்தின் பெயரையும் சர்க்கார் பயன்படுத்துகிறது”. அறிஞர் அண்ணா இப்படிப் பேசியது, இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பேசியதை உறுதிப்படுத்துவதாகவும், விரிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்தது. நான் பெருமையால் பூரித்துப் போனேன்!
இவ்வாறு தனது கன்னிப்பேச்சு குறித்து கருணாநிதி பதிவு செய்திருக்கிறார்.

- நெஞ்சுக்கு நீதி - புத்தகத்திலிருந்து

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close