[X] Close

கருணாநிதி நினைவலைகள் 1: எம்.ஜி.ஆர்., மறைவின்போது கருணாநிதி ஆற்றிய உரை


karunanidhi-on-mgr-s-demise

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 12:43 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நாகரிகத்துகாக அறியப்படுபவர். அவரது அரசியல் வாழ்வில் பல சம்பவங்கள் இதை பறைசாற்றும் வகையில் நடந்தேறியிருக்கின்றன.

1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தபோது திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரை அவரது அரசியல் நாகரிகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

அந்த உரையின்போது அதிமுக கட்சியினரைக் கூட அதிமுக உடன்பிறப்புகள் என்றுதான் கருணாநிதி அழைத்திருப்பார்.
ஒரே வீட்டில் எம்ஜிஆருடன் வாழ்ந்த நாட்களை நினைவுகூர்ந்திருப்பார்.

அவர் ஆற்றிய உரை:

"இனிய நண்பர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சியும் பெரும் துண்பமும் தாக்கிய நிலையில் இருக்கிறேன். 1945-ம் ஆண்டு ஜூபிடர் திரைப்பட நிறுவனத்தில் திரு.ஏ.எஸ்.எஸ்.சாமி அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயனாக நடித்த அவருக்கும் வசனகர்த்தாவாக பணியாற்றிய எனக்கும் நட்பு உதயமாயிற்று. 

கோவை நகரத்தில் நானும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததும். அரசியல் சமுதாய கருத்துகளை பறிமாறிக்கொண்டதும். கலை உலகில் இணைந்து பணியாற்றியதும். இருவரும் ஒரே இயக்கத்தில் செயலாற்றுகிற அளவுக்கு எங்கள் நட்பு கணிந்ததும் என்றென்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாகும்.

அபிமன்யு, மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித்தலைவன், எங்கள் தங்கம், புதுமைப் பித்தன், அரசிளங்குமரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் எங்களின் கலைத்துறை தோழமை கொடிகட்டிப் பறந்தது.
கலைத்துறையில் கொண்டிருந்த அதே நட்புறவுடன் 1972 வரையில் நானும் அவரும் அரசியல் துறையிலும் இரண்டறக் கலந்திருந்தோம்.

அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாறுதலில்கள்கூட எத்தனையோ கருத்து மாறுபடுகளுக்கு இடையே எங்களின் நட்புணர்வு ஆழமாகவே இருந்தது. திரைக்கலைத் துறையில் தமிழகத்தில் ஈடு இணையற்ற கதாநாயகனாக திகழ்ந்தார். திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர். அவரைப் போல திரைப்படத் துறையை தன்வயப்படுத்திக் கொண்டு வெற்றி முரசு கொட்டிய நடிகர்கள் ஒருசிலரே ஆவர்.

1972-ல் அவர் தொடங்கிய அதிமுக கட்சியை மிகக்குறுகிய காலத்திலேயே ஆளுங்கட்சியாக்கிய பெருமைக்குரியவர் அவர்.
10 ஆண்டு காலம் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த அவர் 2, 3 கால உடல்நலிவுக்கு இடையேயும் சலிப்பின்றி உழைத்த உள்ள உறுதியை பாராட்டாதார் இருக்க முடியாது.

விடாமுயற்சி, ஓய்வற்ற உழைப்பு இவற்றின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று ஒளிவிட்ட எனது ஆருயிர் நண்பனின் பிரிவினால் கண்ணீர் வடித்திடும் இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அதிமுக இயக்கத்தின் உடன்பிறப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய துயர சூழ்நிலையை ஒட்டி கசப்புணர்வு காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்து அமைதியும் ஒற்றுமையும் கட்டிக்காக்கப்பட தமிழ் மக்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு கருணாநிதி உருக்கமாக பேசியிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close