[X] Close
 

கலைஞரின் கையெழுத்து, முன்னுரை, பேனா...கண்கள் கலங்குகின்றன! - எழுத்தாளர் இந்துமதி


indhumathi-kalaingar

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Aug, 2018 09:38 am
  • அ+ அ-

கலைஞர் என் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவர் புத்தகங்களைக் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார். அவருடைய பேனாவைப் பரிசாகத் தந்திருக்கிறார். இன்று அவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கண்கள் கலங்கிவிட்டன என்று எழுத்தாளர் இந்துமதி தன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் இந்துமதியின் அந்தப் பதிவு : 

குங்குமத்தில் தொடராக வெளிவந்த என் பைசா நகரத்து கோபுரங்கள், புத்தகமாக வெளி வந்த போது கலைஞரிடம் முன்னுரை கேட்கலாம் என திருமகள் நிலையம் ராமநாதன் அவர்கள் விருப்பப்பட்டார். 

தருவாரா என்கிற சந்தேகத்துடனே நானும் அவரும் பாவை சந்திரனுடன் கோபாலபுரம் இல்லம் சென்றோம். சண்முகநாதன்தான் வரவேற்றார் . மாடியில் கலைஞரது அறைக்கு அனுப்பினார். அதுதான் கலைஞருடன் என் முதல் சந்திப்பு.காபி கொடுத்து மிக சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். முன்னுரை தர உடனே இசைந்தார்.


அதன் பின்னர் எத்தனையோ முறை. சந்தித்திருக்கிறேன். தளபதி ஸ்டாலின், துர்கா, செல்வி, கனிமொழி, ராஜாத்தியம்மா அனைவருடனும் பழகியிருக்கிறேன். எல்லோரும் என்னுடன் அன்பாகவும் நட்பாகவும் தான் பழகுவார்கள். அதிலும் துர்காவிடம் எனக்குத் தனி அன்பு உண்டு. 

கலைஞர் அவரது புத்தகங்கள் அனைத்தையும் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார். தடியான இங்க் பேனாவால்தான் எழுதுவார். அந்தப் பேனாவை கேட்டுப் பெற நினைத்தேன். கேட்டதும் இந்தப் பேனா வேண்டாம். வேறு வாங்கித் தருகிறேன் என்றார். நான் அவர் எழுதும் பேனாதான் வேண்டும் என்றேன். சட்டென்று எடுத்துக் கொடுத்து விட்டார். 


கலைஞர் அன்பானவர். பாசமானவர். ஒரு தந்தையின் பாசத்தை அவரிடம் நான் உணர்ந்திருக்கிறேன். 


இன்று காலை பைசா நகரத்து கோபுரங்கள் முன்னுரையை எடுத்துப் படித்தேன். அவர் கையெழுத்திட்ட அவரது புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தேன். அவரது பேனாவை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். கண் கலங்கியது. 


அவர் யாருக்காவது முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறாரா... தெரியாது. 

யாருக்காவது கையெழுத்திட்ட அனைத்து புத்தகங்களையும் கொடுத்திருக்கிறாரா. தெரியாது. 

அவர் எழுதிய பேனா யாருக்காவது கிடைத்திருக்கிறதா... தெரியாது. 


இப்படியான வாய்ப்பு கிடைத்த நான் மகா பாக்கியசாலிதான்.

இவ்வாறு இந்துமதி எழுதியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close