[X] Close

மெகுல் சோக்ஸி தப்பிக்க மோடி உதவி: ட்விட்டரில் ராகுல் அதிரடி


modi-government-gave-clean-chit-to-choksi-alleges-rahul

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Aug, 2018 14:16 pm
  • அ+ அ-

வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை மோடி அரசாங்கம் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இன்றைய பெருஞ் செய்தி என்ன தெரியுமா? 56 வயதான சூட் பூட் அணிந்த தனது சிறந்த நண்பர் மெகுல் சோக்ஸிக்கு இந்திய அரசாங்கம் கடந்த நவம்பர் 2017-லேயே ஆண்டிகுவா நாட்டு குடியுரிமை பெற உதவி செய்திருக்கிறது. இவர்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி சுருட்டியவர்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு வீடியோவை இணைத்திருக்கிறார் ராகுல் காந்தி. அந்த வீடியோவில் பிரதமர் மோடி தனது உரையில் மெகுல் சோக்ஸியை புகழ்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக நேற்று காலை சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், "வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடுகடத்தக் கோரி கரீபிய தீவுகள் நாடான ஆண்டிகுவாவிற்கு கோரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது" எனக் கூறியிருந்தது.

இந்நிலையில்தான் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசை சாடி ட்வீட் செய்திருக்கிறார். மோடி அரசாங்கம் முன்கூட்டியே தொழிலதிபர் சோக்ஸி தப்பிக்க உதவியதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

யார் இந்த சோக்ஸி?

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி உறவினர் மெகுல் சோக்ஸி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பினார். 

அமெரிக்காவில் இருந்த மெகுல் சோக்ஸி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆண்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இன்டர்போல் அளித்த நோட்டீஸுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்துள்ளது.

மெகுல் சோக்ஸிக்கு குடியுரிமை வழங்கும் முன் ஆன்டிகுவா அதிகாரிகள், இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவரின் நடத்தை குறித்தும், அவர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்ததாகவும் ஆனால், பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை, சிபிஐ, செபி, ஆகியவை மெகுல் சோக்ஸி குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டையும், தவறான நடத்தைச் சான்றிதழும் அளிக்கவில்லை என்று ஆண்டிகுவா குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் வங்கி மோசடி செய்த மெகுல் சோக்ஸி சுதந்திரமாக தப்பித்துச் செல்ல மோடி அரசு உதவியுள்ளதாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன. ஆண்டிகுவா அரசின் இந்தத் தகவல் மிகப்பெரிய சலசலப்பை டெல்லி அரசியல் வட்டாரத்தில் கிளப்பியிருக்கிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close