[X] Close

'உடன்பிறப்பே...’ என கடிதம் எழுதிய கருணாநிதிக்கு உடல்நலம் பெறவேண்டி சிறுமி கடிதம்!


karunanidhi-3rd-std-child

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Aug, 2018 12:37 pm
  • அ+ அ-

உடன்பிறப்பே... என்று திமுக உறுப்பினர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் வெகு பிரபலம். தற்போது உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி, உடல்நலம் பெறவேண்டும் என பிரார்த்தனையுடன் சிறுமி கடிதம் எழுதி, திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டியோ அறிக்கையோ இல்லாத நாளே இருக்காது என்பார்கள். கடந்த அறுபது ஆண்டுகால அரசியலில், எதை பேட்டியாகச் சொல்லவேண்டும், எதற்கெல்லாம் அறிக்கையாகக் கொடுக்கவேண்டும், எதை கேள்விபதில் அறிக்கையாக வழங்கவேண்டும் என்பதை பகுத்துப் பிரித்து தமிழகத்திலும் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார் திமுக தலைவர் கருணாநிதி.

முக்கியமாக, முரசொலியில், திமுகவின் உறுப்பினர்களுக்காக, அவர் எழுதி வந்த உடன்பிறப்பே... எனும் கடிதக் கட்டுரை வெகுபிரபலம். கட்சியினரிடையே மிகப்பெரிய தாக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திய கடிதங்கள் இவை.

இந்த நிலையில், கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக, உடல்நலம் மற்றும் வயோதிகத்தால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. மருத்துவமனை வாசலில் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் சூழ்ந்திருக்க, ஏராளமான தலைவர்கள், பிரபலங்கள் என தொடர்ந்து நலம் விசாரித்தபடியே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சிறுமி ஒருவர், காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அந்தக் கடிதத்தில், கலைஞர் தாத்தா விரைவில் உடல்நலம் பெறவேண்டும் எனும் வேண்டுதலும் பிரார்த்தனையுமான வார்த்தைகள் இருந்தன.

அந்தச் சிறுமியைக் கண்டு நெகிழ்ந்த ஸ்டாலின், ‘என்ன படிக்கிறே?’ என்று கேட்டார். ‘மூன்றாம் வகுப்பு’ என்று சொன்னார் சிறுமி. அந்தச் சிறுமியின் பெயர் மிச்சேல் மிராக்ளின். ‘கலைஞரைத் தெரியுமா, பாத்திருக்கியா?’ என்று ஸ்டாலின் கேட்டார். ‘டிவிலதான் பாத்திருக்கேன். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்’ என்றார்.

பிறகு, ‘என்னைத் தெரியுமா உனக்கு? என் பேர் என்ன?’ என்று ஸ்டாலின் கேட்டார். ‘தெரியும். ஸ்டாலின்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிறுமி.

’தலைவருக்கு உடம்பு சரியில்லைன்னதும் அழ ஆரம்பிச்சிட்டா. ரொம்ப வருத்தப்பட்டு இருந்தா. மறுநாள் காலைல டிவியைப் பாத்தப்ப, உடம்பு கொஞ்சம் தேறி வர்றார்னு செய்தியைப் பாத்ததும்தான் ஸ்கூலுக்குக் கிளம்பினா. தாத்தா நல்லாயிட்டார்லன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. தாத்தாவுக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கேன்னு காட்டினா’ என்று தெரிவிக்கப்பட்டது.

பிறகு அந்தக் கடிதம் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. ‘அவர் குணமாகி வீட்டுக்கு வந்தவுடனே, இந்த லெட்டரைக் கொடுக்கறேன்’ என்று ஸ்டாலின் சொன்னார். அப்போது அந்தச் சிறுமி, ‘தாத்தா குணமாகி வீட்டுக்கு வந்ததும், அவரைப் பாக்கணும், முடியுமா?’ என்று கேட்க, நெகிழ்ந்து போன ஸ்டாலின், ‘நிச்சயமா. உன்னைக் கூப்பிடுறேன். நீ பாக்கலாம்’ என்று சொன்னார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close