[X] Close

உதயநிதி பராக்.. சட்டப்பேரவைக்கும் வந்துவிட்டார்!


udhayanidhi-stalin-arrives-in-tn-secretariat

படங்கள்: எல்.சீனிவாசன்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 15:29 pm
  • அ+ அ-

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வந்தார். 2012-ல் தான் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ஓகேஓகே மூலம் அறிமுகமான உதயநிதிக்கு அந்தப் படம் நல்ல ஓப்பனிங்காக அமைந்தது.

அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் அவர் ரெட் ஜெயின்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவ்வப்போது அரசியல் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டுவருகிறார். திமுக பிரமுகர்கள் இல்ல நிகழ்ச்சிகளிலும்கூட உதயநிதி ஸ்டாலினைப் பார்க்க முடிகிறது.
அப்படி போராட்டக் களங்களில் தென்பட்ட உதயநிதி நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன் என்னை திமுக-காரனாகப் பாருங்கள். இனி அடிக்கடி என்னை பொது மேடைகளில் போராட்டக் களங்களில் பார்க்கலாம் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்.

கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்ற வரிசையில் உதயநிதியும் ஒருநாள் பதவியில் கவுரவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அதற்கான காலம் மிக விரைவில் கைகூடும் சூழல் உருவாகிவிடும் போலிருக்கிறது.
நேற்று தஞ்சையில் நடைபெற்ற திமுக பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழாவில் தந்தையும் மகனும் மேடையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருமண விழாவில் பேசிய உதயநிதி, "இந்த திருமணத்துக்கு நான்தான் தலைமை வகிப்பதாக இருந்தது. அதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடைசி நேரத்தில் தட்டி பறித்து விட்டார்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "வெளிநாடு செல்லவிருந்ததால் உதயநிதிக்கு தலைமையேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த பயணம் ரத்து செய்யப்பட்டால் எனது தலைமையில் விழா நடைபெறுகிறது. திமுக குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப்பறிக்க முடியாது. ஆளும் வளரனும், அறிவும் வளரணும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட உதயநிதி,  தனக்கு இரண்டும் வளர்ந்திருக்கு என்றும், அனுபவமும் வளர்ந்திருக்கு என்றும் கூறினார்.
ஸ்டாலின் உதயநிதியின் இந்த மேடைப்பேச்சு ஹாட் டாப்பிக் ஆனது. அந்த டாப்பிக்கை நீர்த்து போகவிடாமல் ஹாட் பேக்கில் வைப்பதுபோல் ஸ்டாலின் ஒரு வாக்குறுதியும் தந்தார்.

விழாவில் பேசிய ஒரத்தநாடு எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரன், "உதயநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்க வேண்டும். அவருக்கு பொறுப்பு வழங்குவதில் தவறில்லை என்றார். சிலர் மனைவியை அரசியல்வாதியாக்கும்போது, இது தவறே இல்லை" என்று கூறினார்.

அதற்கு ஸ்டாலின், "உரிய நேரம் வரும்போது உதயநிதிக்கு வாய்ப்பும், பதவியும் அதுவாகவே வந்து சேரும் என்றார்".
ஸ்டாலின் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால்.. "ஆக.. உள்ளபடியே உதயநிதி அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது போலும்!"

இந்த சுடச்சுட வரிசையில் சேர்ந்துகொண்டுள்ளது இன்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தது. அவரது நண்பர் அன்பில் மகேஷ் பேச்சைக் கேட்பதற்காக சட்டப்பேரவை வந்த உதயநிதி தனது தந்தை பேசுவதையும் கேட்பதற்காக சுமார் 1 மணி நேரம் சட்டப்பேரவை கேலரியில் இருந்தார்.

இன்று கேலரியில் இருப்பவர் நாளை எம்.எல்.ஏ., வரிசையிலும் இருக்கலாம். ஓகேஓகே பட ஓப்பனிங் போல சட்டப்பேரவையும் உதயநிதிக்கு ஓகேஓகே அகிறதா என்று பார்ப்போம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close