[X] Close

விசாமாதா, பாஸ்போர்ட் மாதா... ட்ரோல்களுக்கு சுஷ்மா பதிலடி


sushma-swaraj-becomes-the-latest-victim-of-internet-trolling

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jun, 2018 12:43 pm
  • அ+ அ-

இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவது பிரபலங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ட்ரோல் செய்யப்படுவதற்கு பிரபலமாக இருப்பதே குறைந்தபட்ச தகுதி. அப்படி பிரபலமாக இருந்தால்போதும் இணையவாசிகளால் எப்போது வேண்டுமானால் ட்ரோல் செய்யப்படலாம்.

அப்படித்தான் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் துடிப்புடன் இருக்கிறார். வெளிநாட்டில் சிக்கலில் சிக்கிய இந்தியர்கள் பலருக்கு அவர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அதேபோல் நோயால் வருந்தும் பாகிஸ்தானியர்களுக்கு உடனடியாக மருத்துவ விசா பெற்றுத்தரவும் அவ்வப்போது உதவி வருகிறார். இப்படித்தான், அண்மையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு பாஸ்போர்ட் கிடைக்க சுஷ்மா ஸ்வராஜ் உதவினார். முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரி மறுத்ததாக பெண் ஒருவர் சுஷ்மாவை டேக் செய்து ட்வீட் செய்ய அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்க சுஷ்மா உதவினார். அதேவேளையில் விகாஸ்மிஸ்ரா என்ற அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அந்த அதிகாரிக்கு ஆதரவாக பலர் ட்வீட் செய்தனர். சிலர் ஒருபடி மேலே சென்று இந்த சம்பவத்துக்காக சுஷ்மாவை ட்ரோல் செய்தனர். 

இது குறித்து சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நான் நாட்டில் இல்லை. அப்போது என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் திரும்பிவந்தபோது எனக்கு சிலர் ட்வீட்டால் அர்ச்சனை செய்திருந்ததைப் பார்த்தேன். என்னை 'கவுரவித்த' அந்த ட்வீட்களைப் பகிற்கிறேன். அதற்காகவே அவற்றிற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சித்திருந்த 70 ட்வீட்களை சுஷ்மா லைக் செய்திருந்தார். அவற்றில் நிறைய ட்வீட்கள் சுஷ்மாவை விசாமாதா, பாஸ்போர்ட் மாதா என்றெல்லாம் கிண்டல் செய்திருந்தன. சிலர் சுஷ்மா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியிருந்தனர். இன்னும் சிலர் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா கொடுத்து சுஷ்மா தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகக் கூறியிருந்தனர். ஒருசிலர் அவரது உடல் நலனைக்கூட விமர்சித்திருந்தனர். இப்படி, தன்னை விமர்சித்த அத்தனை ட்வீட்களையும் லைக் செய்தார் சுஷ்மா. 

ட்ரோல் செய்த நெட்டிசன் களின் போஸ்டை லைக் செய்து அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.
இதற்கிடையில், சுஷ்மாவுக்கு பத்திரிகையாளர் பர்கா தத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில், சுஷ்மாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உங்களை ட்ரோல் செய்தவ உங்கள் கட்சிக்காரர்கள் உட்பட அனைவருக்கும் நீங்கள் பதிலடி கொடுத்ததை வரவேற்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close