[X] Close

இனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்!


rahul-gandhi-s-birthday

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jun, 2018 15:35 pm
  • அ+ அ-

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் இந்தியாவின் முதல் இளம் வயது பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் இப்படி அறியப்பட எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சிலர் ராகுல் காந்தியை பப்பு என்று அழைப்பதேன்!? ராகுல் காந்தி இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இப்படி ஒரு சந்தேகம் வந்தது.

ட்விட்டரில் என்னவோ #HappyBirthdayRahulGandhi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியே ராகுலுக்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்று துல்லியமாக 6 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் ஒரு சாரார் அவரைப் பப்பு என்று கலாய்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 

2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியை பிரதமர் மோடி ஒருமுறை பச்சா (இந்தியில் பச்சா என்றால் சிறுவன் என்று அர்த்தம்) என விமர்சித்தார். அதன்பின்னர்தான் பப்பு என்று வார்த்தையும் வைரலானது. எனவே, பப்பு திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாகக்கூட இருக்கலாம். 

சமூகவலைதளங்களில் தங்களுக்கு சாதகமானதை ட்ரெண்ட் செய்வதற்கும் தங்களுக்கு எதிரானவர்களை கலாய்ப்பதற்குமாகவே எல்லா அரசியல் கட்சியும் தனித்தனியாக ஐடி விங் வைத்து இயங்கும் காலகட்டத்தில் இதெல்லாம் சாத்தியம்தான். யாரை வேண்டுமானாலும் இணையத்தில் ட்ரோல் செய்ய முடியும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் கண் அயர்ந்தபோதும், உத்தரப் பிரதேசத்தில் கலாவதியின் வீட்டில் உணவருந்திய கதையை அவர் நாடாளுமன்றத்தில் கூறியபோதும் அவரை பப்பு என்றார்கள் சரி. குஜராத் யுனைடட் கிங்டம்மை விடப் பெரியது குஜராத்தில் 27,000 கோடி பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்றெல்லாம் பேசியபோது அவரை பப்பு என்றார்கள் சரி.

ஆனால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வாங்கிய அடிக்கு பின்னர் அப்படி பேசும்படி வைத்திருந்தால் பிரச்சினை எங்கிருக்கிறது.
குஜராத் தேர்தல் முடிவு குறித்து ராகுல் பேசியதைக் கவனிக்க வேண்டும். "குஜராத் தேர்தல் முடிவு மோடியின் பிம்பத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே காட்டுகிறது" என்றார். 

ஆம் அது சரியான பார்வைதான். மோடியின் பிம்பத்தை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்தான். கர்நாடகா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தால் ராகுல் சொல்லியதை பப்புவின் வார்த்தை என்று நாம் நிராகரித்திருக்கலாம்.
மோடியின் பிம்பத்தை நிராகரிக்க மக்கள் தொடங்கியிருக்கும் அதே வேளையில் வேறு ஒரு தலைவன் மீது மக்கள் நம்பிக்கை பதிய வேண்டும். அந்த நம்பிக்கைக்குரியவராக ராகுல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் அவரை பப்பு என்று கூப்பிடமுடியாது அல்லவா. அப்படியென்றால் பிரச்சினை எங்கிருக்கிறது.

குஜராத் தேர்தல், கர்நாடக தேர்தலை எல்லாம் முதலீடாக்கி தன் மீதான பப்பு பார்வையை மாற்ற வேண்டிய நெருக்கடி ராகுல் காந்திக்கு இருக்கிறது.

மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் என காங்கிரஸ் ஜாம்பவாஙள் எல்லோரும் ராகுல் சொல்வதைக் கேட்டு செயல்படுத்தும் பொறுப்புகளில்தான் கட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல் முதிர்ச்சி கொண்டவர் பிரணாப். அங்கு சகிப்புத்தன்மையைப் பற்றி பேசி தனது கட்சிக்குதான் அவர் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ பணக்கொள்ளை என்று விமர்சித்த பொருளாதார வல்லுநர் மன்மோகன் சிங். 
திமுகவுடனான கூட்டணி உறவை மட்டுமல்ல எந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தாலும் அங்கு குலாம் நபி ஆசாதின் அரசியல் பங்களிப்பு வலுவானதாக இருக்கும். அவரால்தான் சென்னை வந்துவிட்டு கருணாநிதியை சந்திக்காமல் ராகுல் சென்றாலும்கூட கூட்டணியில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இப்படியான அரசியல் மூத்தோரிடம் பாடம் கற்றுக் கொண்டாலே போதும் பப்பு அடையாளம் மறைந்துவிடும்.

இன்று மோடி பிம்பம் மங்கும் நேரத்தில் மோடி அலை குறைந்திருக்கும் காலத்தில் ராகுல் அரசியல் பழக வேண்டும். எதிர்ப்பை எல்லாம் எதிரணியாக திரட்ட வேண்டும். அந்த அணியில் தொங்கல் சறுக்கல் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதையெல்லாம் செய்வார் என நம்பி, அரசியலில் பப்புவாக விமர்சிக்கப்படும் ராகுல் காந்தியை இனிமேலும் பப்பு என்று கூப்பிடாமல் இருப்போமாக. அவருக்கு இன்று வயது 48 ஆகிவிட்டது. அதே வேளையில் அவரது தந்தை ராஜீவ் காந்தி 40 வயதில் பிரதமராகிவிட்டார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close