[X] Close

யாரை ஏற்றுக்கொண்டாலும் சசிகலா, தினகரனை ஏற்கமாட்டோம்: டி.ஜெயக்குமார்


aiadmk-will-accept-anyone-but-not-sasikala-and-her-family-d-jayakumar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jun, 2018 11:18 am
  • அ+ அ-

டி,ராமகிருஷ்ணன்

- தமிழில் பாரதி ஆனந்த்

புரட்சித் தலைவரையும் அம்மாவை ஏற்றுக்கொண்ட யாரை வேண்டுமானாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். ஆனால், சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் ஒருபோதும் கட்சி ஏற்றுக்கொள்ளாது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில்...

கட்சியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களை கட்சிக்கே திரும்ப அழைத்துவருவதற்கு ஏதேனும் முயற்சி எடுத்துள்ளீர்களா?

அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சி. புரட்சித் தலைவர் (அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன்), அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) வழியில் கட்சி வளர்ந்தது. இப்போதும் இந்த ஆட்சி நடப்பதற்கும் அம்மாவே காரணம். புரட்சித் தலைவரையும், அம்மாவை தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் ஒருபோதும் வேறு கட்சியில் இணையமாட்டார்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஒருவேளை அவர்கள் திரும்பி விரும்பினால் கட்சி அதை பரிசீலிக்கும். ஆனால், சசிகலாவையோ, தினகரனையோ, திவாகரனையோ அல்லது அவர்கள் குடும்பத்தினரையோ எந்த சூழலிலும் மீண்டும் கட்சியில் இணைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

18 எம்.எல்.ஏ.,க்களை  கட்சிக்கு திரும்பச் செய்ய ஏதாவது சலுகை வழங்குவீர்களா? 10 மாதங்கள் எதிரணியில் இருந்த அவர்களிடமிருந்து நீங்கள் ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா?
 
அரசியலை வியாபாரம் மாதிரி செய்ய முடியாது. வியாபாரத்தில்தான் கொடுக்கல் வாங்கல் சாத்தியம். இந்தப் பிரச்சினை கட்சி சார்ந்தது. கட்சியின் உண்மையான உறுப்பினர்களாக இருந்தால் கட்சியின் கட்டுக்கோப்பு சிதையவிடாமல் பாதுகாத்துக் கொள்வர். அப்படி ஓர் எண்ணம் இருப்பவர்கள் நிச்சயமாகக் கட்சிக்குத் திரும்புவார்கள். கட்சி மீதான் அத்தகைய ஈடுபாடு இருப்பவர்களால்தான் புரட்சித் தலைவர், அம்மா மறைவுக்குப் பின்னாலும்கூட கட்சியிலிருந்து யாரும் திமுகவுக்கோ இல்லை வேறு கட்சிக்கோ செல்லவில்லை. 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் ஏதாவது சமரச முயற்சி நடந்து வருகிறதா?

இந்த விவகாரம் இப்போதைக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. மூன்றாவது நீதிபதி இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

18 எம்.எல்.ஏ.,க்களும் திரும்புவார்கள் என நம்புகிறீர்களா?

கட்சியின் நலம் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால்; புரட்சித் தலைவர் மற்றும் அம்மா மீது உண்மையான ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் கட்சிக்குத் திரும்ப வேண்டும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்களுக்கு இடையேயும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இடையேயும் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏன்?

கால இடைவெளியை சபாநாயகர்தான் முடிவு செய்வார். அலுவல் ஆய்வுக் குழு கூடி இதுதொடர்பான முடிவுகளை எடுக்கிறது. இதற்கு முன்னரும்கூட இதுபோல் 5 நாட்கள் ஒருவாரம் ஏன் 10 நாட்கள் ஒத்திவைப்பு இடைவெளிக்குப் பின்னர் அவை அலுவல்கள் நடந்திருக்கின்றன. 

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிக்கைகளை வாசிக்கும் நடைமுறையைத் தொடர அவசியம் இருக்கிறது என நினைக்கிறீர்களா? அல்லது அவையில் விவாதங்களைத் தவிர்ப்பதற்காக முதல்வர் அவ்வாறு செய்கிறார் என நினைக்கிறீர்களா?

விவாதங்களைத் தவிர்க்க முயல்கிறோம் என்பது தவறான பார்வை. அம்மா முதல்வராக இருந்தபோது அவர் அவை இத்தகைய அறிக்கைகளை வாசிப்பார் அவர் வழியில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. எனவே, முதல்வர் பழனிசாமியும் அம்மா வழியில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கைகளை வாசிக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? 
இத்தகைய அறிக்கைகளால் மக்களுக்கு என்ன நன்மை சென்று சேர்கிறது என்பதுதான் முக்கியம். உதாரனத்துக்கு, எனது துறையையே (மீன்வளத்துறை) எடுத்துக் கொள்ளுங்கள். முதல்வர், மீனவர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்க அம்சம்தானே

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close