[X] Close

கர்நாடகாவில் யாருக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் அமையப்போவது பாஜக ஆட்சி? - அமித் ஷா போடும் புது கணக்கு


bjp-ahead-in-karnataka

  • நெல்லை ஜெனா
  • Posted: 13 May, 2018 12:13 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதிகள் தவிர மற்ற 222 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ் வரி தொகுதியில் போலி வாக்கா ளர் அட்டைகள் சிக்கியதாலும் இந்த தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் கொரட்டகெரெ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும் போட் டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிக ளின் தலைவர்கள் கடந்த இரு மாதங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். கடைசிக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தேசிய த‌லைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரத மர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை மறுநாள் (மே 15) நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி இவர்களில் யார் அடுத்த முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் அடுத்த ஆட்சி அமைவதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பங்கு முக்கியமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அல்லது பாஜக எந்த கட்சியாக இருந்தாலும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவுடன் ஆட்சியைமக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த கட்சியை தங்கள் பக்கம் இழுக்க இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன. இதில் யாருடன் சேர்ந்த அரசு அமைக்க வாய்ப்புள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், இரண்டு கருத்து கணிப்புகளை தவிர மற்றவற்றில் பாஜக அதிக இடங்களை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை தங்கள் பக்கம் இழுக்க அக்கட்சி முயலும் என்று கூறப்படுகிறது.

காரணம் என்ன?

பழைய மைசூரு என அழைக்கப்படும் முன்பு மைசூர் சமஸ்தான பகுதிகளில் மட்டும்தான்  மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக உள்ள ஒக்கலிகா சமூக வாக்குகளே இதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இந்த பகுதியில் மட்டும் 65 தொகுதிகள் உள்ளன இந்த பகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும் காங்கிரஸூக்கும் இடையில் தான் போட்டியே. இங்கு பாஜக வாக்கு வங்கி இல்லாத கட்சி. எனவே காங்கிரஸை எதிர்த்து வென்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸூடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டும். அதுபோலவே, இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வெற்றி பெற ஏதுவாகவும், காங்கிரஸை தோற்டிக்கடிக்கவும், பாஜக மைசூரு பகுதியில் பெயரளவுக்கு வேட்பாளர்களை நிறுத்தியாகவும் கூறப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம் முன்மாதிரி

இதுமட்டுமின்றி போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மற்ற கட்சிகளை வளைக்கும் வேலையை மற்ற மாநிலஙகளில் இதற்கு முன்பு செய்துள்ளது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மற்ற கட்சி எம்எல்ஏக்களை இழுத்து பாஜக ஆட்சியமைத்த வரலாறும் உண்டு. பாஜகவுக்கு ஆதரவான கவர்னர் கர்நாடகவில் இருப்பதாலும், பாஜக கூட்டணியில் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு மத்திய அமைச்சர் பதவி போன்றவற்றை காட்டி பாஜக விலை பேசக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதுபோன்ற வாய்ப்புகள் காங்கிரஸூக்கு இல்லை. எனவே காங்கிஸூக்கு அதிக இடங்கள் கிடைத்தால் கூட, அதனை தட்டிப்பறித்து ஆட்சியமைக்கும் வியூகத்தை பாஜக செய்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, மதச்சார்பற்ற ஜனதாதள மாநில தலைவர் குமாரசாமியுடன் ஏற்கெனவே ஆலோனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவ கவுடாவுடன் பிரதமர் மோடி  பேசியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிந்த நிலையில் பாஜக மேலிடத் தலைவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close