[X] Close

சாதாரண தொண்டனையும் வேட்பாளராக உயர்த்தும் ஜெ. பார்முலாவை கை கழுவிய அதிமுக தலைமை: பழைய காலம் திரும்புமா; தொண்டர்கள் ஏக்கம்


admk-manifesto

ஜெயலலிதா: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:44 am
  • அ+ அ-

சாதாரண அதிமுக தொண்டனையும், வேட்பாளராக உயர்த்தும் ‘ஜெ. பார்முலா’ இந்த தேர்தலில் தூக்கி வீசப்பட்டதாக அடிமட்டத் தொண்டர்கள் குமுறலில் உள்ளனர்.

ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலை இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி சந்திக்க உள்ளது. அவருக்குப் பின் ஆளுமையான தலைமை இன்றி, வேட்பாளர்கள் தேர்விலும், அறிவிப்பிலும் பல்வேறு நெருக்கடிகளை முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்தனர். வாரிசு அரசியலுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும், இம்முறை தனது மகனுக்காக தேனி மக்களவைத் தொகுதியைக் கேட்டு வாங்கி சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

கட்சி நிர்வாகிகள் பலரது வாரிசுகளுக்கும் தாராளமாய் சீட் வழங்கி உள்ளனர். கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாததால் பாரம்பரிய அதிமுக தொகுதியான திண்டுக்கல்லையும் பாமகவுக்கு ஒதுக்கி விட்டனர். மேலும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடவில்லை. தூக்கி வீசப்பட்ட ஜெ. பார்முலாகடந்த காலத்தில் அதிமுகவில் சாதாரண தொண் டனும் உயர் பதவியை எட்ட முடியும் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா.

இதற்கு சிறந்த முன்னுதாரணம் ஓ.பன்னீர்செல்வம்தான். சாதாரண நகராட்சித் தலைவராக இருந்த அவரை எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் என்று உயர்ந்த நிலைக்கு கொண்டு போய் திமுகவினரையே வியக்கச் செய்தவர் ஜெயலலிதா. ஆனால், திமுக உள்பட மற்ற கட்சிகளில் சாதாரண தொண்டர்கள் உயர் பதவிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள், தலைமைக்கு நெருக்கமான மேல்மட்ட நிர்வாகிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உள்ளது.

இதனாலேயே அரசியல் களத்தில் அடிமட்டத் தொண்டனையும் உச்சிக்குக் கொண்டு செல்லும் ஜெயலலிதாவின் பாங்கு இன்னமும் பேசப்பட்டு வருகிறது. அதனால்தான், மற்ற கட்சிகளை விட அதிமுகவில் உணர்வுப் பூர்வமான தொண்டர்கள் அதிகளவில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அதிமுகவிலும் மற்ற கட்சிகளைப் போல முன்னணி நிர்வாகிகள் பலர் மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து தங்கள் வாரிசுகளுக்கு சீட் பெற்றுள்ளனர். இதனால் கட்சியின் கீழ்மட்ட அளவில் ஏற்பட்ட அதிருப்தி வருகிற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிருப்தியை சரிக்கட்ட தற்போது ‘தொண்டர்களை தூக்கி விடும்’ பார்முலாவை அதிமுக தலைமை ஆராயத் தொடங்கி உள்ளது.

பெரியகுளம் சட்டப் பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் தென்கரை அருகே உள்ள கல்லுப் பட்டியைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். கட்சிப் பணிகளில் பெரியளவில் ஈடுபாடில்லாத இவர், சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் சிபாரிசில் சீட் பெற்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெரிய குளம் தொகுதி வேட்பாளரை மாற்றி, சாதாரண தொண்டர் ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரு கிறது.

இதற்காக அதிமுகவில் பல ஆண்டுகளாக மேடை, பந்தல் அமைத்து வரும் விசுவாசி ஒருவரை நேற்று முன்தினம் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் ஜெ. பார்முலா கைவிடப்படவில்லை என அதிமுக கீழ்மட்டத் தொண்டர்களுக்கு உணர்த்தப்படலாம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கட்சி நிர்வா கிகள் சிலர் கூறுகையில், ஒரு வேட்பாளரை மாற்றினால் இதை வைத்து பல தொகுதிகளில் இருந்தும் சீட் கிடைக்காதவர்கள் சென்னை தலைமையை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டு விடும். இருப்பினும், கட்சித் தலை மையின் முடிவே இறுதியானது என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close