[X] Close

தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க திமுக வேட்பாளர் கார்கள் புடைசூழ அணிவகுப்பு: நெல்லையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு


dmk-candidate

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:37 am
  • அ+ அ-

திருநெல்வேலியில் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞான திரவியம் கட்சி நிர்வாகிகளுடன் கார்களில் அணிவகுத்து சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்ததால் மாநகரில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளும், பயணிகளும், தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவியரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலி சந்திப்பில் காமராஜர், அம்பேத்கர், அண்ணா, எம்.ஜி.ஆர்., முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் அமைந்துள்ளன. இத்தலைவர் களின் பிறந்த நாள், நினைவு தினங்களில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவர். அப்போது மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவது வாடிக்கை.

சிலைகளுக்கு மாலை அணிவிக்க வருவோர் தங்களது கார்களையும், இருசக்கர வாகனங்களையும் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் ஆற்றுப்பாலத்திலிருந்து, அண்ணா சிலை சந்திப்பு வரையிலான சாலையில் போக்குவரத்து கடுமை யாக ஸ்தம்பிக்கும். அத்தகைய நிலைதான் நேற்றும் உருவானது. வாகனங்களில் அணிவகுப்புதிருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஏராளமான கார்களில் திருநெல்வேலி சந்திப்புக்கு அணிவகுத்து வந்து இங்குள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்ததே இதற்கு காரணம். இதுபோல் பாளையங் கோட்டையிலுள்ள பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார். அப்போது ஏராளமான கார்களில் கட்சியினர் அணி வகுத்ததால் முக்கிய சாலைகளில் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனா முதலியார் பாலம், அங்கிருந்து சந்திப்பு பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை, ரயில் நிலையத்துக்கு செல்லும் தமு சாலை, வண்ணார்பேட்டை சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். மாணவர்கள் பரிதவிப்புகாலை வேளையில் அலுவலக ங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகளுக்கு செல்வதற்காக அவசர, அவசரமாக வாகனங்களில் வந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். பிளஸ் 2 தேர்வுக்காக நேற்று காலையில் வாகனங்களில் இவ்வழியாக சென்ற மாணவ, மாணவியரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் அரசியல் கட்சியினர் இடையூறு விளைவிப்பது திருநெல்வேலியில் அடிக்கடி நடைபெறுகிறது. இப்போது வேட் பாளர்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேடிக்கை பார்த்த தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பறக்கும்படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோர் 3 வாகனங்களுடன் மட்டும் வர வேண்டும். குறிப்பிட்ட 5 பேர் மட்டுமே வேட்பாளருடன் அனுமதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்கவும், கணக்கிடவும், வீடியோ பதிவு செய்யவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏராளமான வாகனங்களில் வேட்பாளருடன் முக்கிய கட்சியினர் அணிவகுத்து செல்வதையும், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் போக்குவரத்தை முடக்கி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதிப்பட வைப்பதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close