[X] Close

முதல்வரையே பாதுகாக்க முடியாத அரசு எப்படி மக்களைப் பாதுகாக்கும்?- உதயநிதி கேள்வி


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 18:18 pm
  • அ+ அ-

தருமபுரி மாவட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை தேர்தல் பணி களத்துக்கு அழைத்து வர கட்சியினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்படாத காலத்தில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இருந்தார். உட்கட்சி விவகாரங்களால் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இடையில், சரிவர தேர்தல் பணியாற்றவில்லை எனக் கூறி திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. அப்போது கட்சியில் இருந்தே விலகினார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். பின்னர் தேமுதிக-வில் இணைந்து ஓராண்டு வரை நீடித்தவர் அங்கும் தீவிர செயல்பாடின்றி அமைதியாகவே இருந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் நேரில் சென்று வந்தார் முல்லைவேந்தன். இதற்கிடையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைவராக பதவியேற்ற ஸ்டாலின் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கினார். அப்போது முல்லைவேந்தன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும்படி தலைமை உத்தரவிட்டிருந்தது. எனவே, தன் பரிவாரங்களுடன் முல்லைவேந்தன் கோவையில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியானது. தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின. தற்போது, தருமபுரி மக்களவைத் தொகுதியில் மருத்துவர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தலில் வழக்கறிஞர் ஆ.மணி, அரூர் (தனி) இடைத் தேர்தலில் பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தருமபுரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்ச்சி, கட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என எதிலும் முல்லைவேந்தன் பங்கேற்கவில்லை. பிரச்சார களத்திலும் அவரைக் காண முடியவில்லை. இதற்கிடையில், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வேட்பாளர்களுடன் சென்று முல்லைவேந்தனை சந்தித்து ஆதரவு கேட்டதுடன், தேர்தல் பணிக்கும் அழைத்துள்ளார். இருப்பினும், சில வருத்தங்கள் காரணமாக அவர் தேர்தல் பணிக்கு வரும் மனநிலையில் இல்லை என தெரிகிறது.

இதுபற்றி முல்லைவேந்தனை நன்றாக அறிந்த சிலரிடம் பேசியபோது, ‘மீண்டும் கட்சிக்கு திரும்பிய முல்லைவேந்தன், தலைமை உத்தரவுபடி கோவையில் தீவிர பணியில் ஈடுபட்டார். தற்போது பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க சென்னை சென்றார். ஸ்டாலினை சந்தித்து இதுபற்றி அவர் பேசியபோது, எ.வ.வேலுவை பார்த்து பேசும்படி ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத முல்லைவேந்தன் அப்படியே ஊர் திரும்பி விட்டார். ‘அடுத்த முறை போட்டியிடலாம்’ என்று கூறியிருந்தால் கூட அவர் இயல்பாக நினைத்திருப்பார். எ.வ.வேலுவை பார்த்துப் பேசிய பிறகு விருப்பமனு அளிக்கும்படி ஸ்டாலின் கூறியதை மிகப்பெரிய அவமரியாதையாக கருதுகிறார்.

அதனால் தான் பிரச்சார களத்துக்கு அவர் செல்லவில்லை. அமமுக போட்டியிடுவதால் தருமபுரி மக்களவை மற்றும் 2 இடைத் தேர்தல் தொகுதிகளிலும் எளிதாக திமுக-வை வெற்றி பெறச் செய்ய முடியும். ஆனால், நீண்டகால தேர்தல் அனுபவமும், மக்கள் அறிமுகமும், தனிப்பட்ட செல்வாக்கும் கொண்ட முல்லைவேந்தனின் தேர்தல் பணியும் இதற்கு மிகவும் அவசியம். இதை உணராத தலைமை அவரை அரவணைக்க தவறியுள்ளது. வேட்பாளர்கள் அவரை சந்தித்தபோது, ‘என் வாக்கு திமுக-வுக்கு தான், பிரச்சார பணியை பாருங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். இது திமுக-வின் வெற்றிக்கு தான் பாதகமாக அமையும்’ என்றனர்.

இதற்கிடையிலும், அவரை சமாதானப்படுத்தி தேர்தல் பணிக்கு அழைத்து வர சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close