[X] Close

சேலம் மக்களவைத் தொகுதியில் மும்முனை போட்டி: முதல்வரின் மாவட்டம் என்பதால் பரபரப்பு


salem

முதல்வர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:24 am
  • அ+ அ-

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் களத்தில் அதிமுக, திமுக-வுக்கு இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள் நிலையில், அமமுக வேட்பாளர் இவ்விரு கட்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

திமுக வேட்பாளராக எஸ்.ஆர்.பார்த்திபனும், அதிமுக வேட்பாளராக கேஆர்எஸ் சரவணன், அமமுக வேட்பாளராக எஸ்கே செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மூவரும் தங்கள் சமூக வாக்குகளை பெற தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

திமுக வேட்பாளர் எஸ்ஆர் பார்த்திபன் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த மேட்டூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு சேலம் வடக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ராஜேந்திரனிடம் 9 ஆயிரத்து 873 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

அமமுக வேட்பாளர் எஸ்கே செல்வம், வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2001 மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தலில் (அதிமுக சார்பில்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் தங்களுக்கே வெற்றி என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

அதிமுக, திமுக நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அமமுக போட்டியிடுவதால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் சேலம் மக்களவைத் தொகுதி அனைவரின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close