[X] Close

முஸ்லிம், கிறிஸ்தவர், மொழி சிறுபான்மையினருக்கு தமிழக காங்கிரஸ் 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: ராகுல் காந்திக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்


peter-alphonse-letter

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 09:28 am
  • அ+ அ-

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9-ல் 3 தொகுதிகளை முஸ்லிம், கிறிஸ்தவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மொழி சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள் நியமனத்தில் ஐந்து பெரும்பான்மை சமூகத்தினருக்கு ஒருவர் வீதம் ஐந்து பேரை நியமனம் செய்தீர்கள். இப்போது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடமளிக்க வேண்டும். சிறுபான்மை என்றால் மத சிறுபான்மை, மொழி சிறுபான்மை மற்றும் சமூக சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த தகுதியான காங்கிரஸ் நண்பர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு கிறிஸ்தவர், ஒரு இஸ்லாமியர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் மற்றும் பெரும்பான்மை சமூகங்களைச் சாராத மற்ற சமூகங்களைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மை சமூகங்களுடைய குரலை ஒலிக்க அந்த சமூக மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸை விட்டால் வேறு வழி இல்லை. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி சிறுபான்மை மக்களே.

கன்னியாகுமரி தொகுதி ஓரு கிறிஸ்தவ காங்கிரஸ் நண்பருக்கு வழங்கப்பட வேண்டும். அங்கு மட்டும்தான் ஒரு சிறுபான்மை கிறிஸ்தவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியும். நான் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் தெரிவு செய்கிறபோது எனது கோரிக்கையினை பரிசீலிக்க அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பீட்டர் அல்போன்ஸின் இந்த திடீர் கோரிக்கை தமிழக காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close