[X] Close

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 20-ம் தேதி ராகுல் வெளியிடுவார்: கே.எஸ்.அழகிரி தகவல்


congress-candidates

கே.எஸ்.அழகிரி, சத்யமூர்த்தி பவன் கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 09:29 am
  • அ+ அ-

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை 20-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தி வெளியிட இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவற்றில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலிப்பதற்கான தேர்தல் பணிக்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

பணிக்குழு கூட்டம்

கட்சியின் தேசிய செயலாளர்கள் வல்லபிரசாத், சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. யார், யார் போட்டியிட தகுதியானவர்கள், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்திருக்கிறோம். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) நடக்கிறது. அதில் வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, பட்டியலை 20-ம் தேதி ராகுல் காந்தி வெளியிடுகிறார்.

ஆதரவு பெருகியுள்ளது

‘கஜா’ புயல் தாக்கியபோது, சேதங்களைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவில்லை. ஆனால், ராகுல் காந்தி வந்து பார்வையிட்டார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, நாகர்கோவிலில் ராகுல் காந்தி பேசியது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், மக்கள் ஆதரவு காங்கிரஸூக்கு பெருகியுள்ளது. அதை வாக்குகளாக மாற்ற இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசு உடனிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close