எடப்பாடி பழனிசாமிய தெரியும் 'முடியலடா சாமி' தெரியுமா உங்களுக்கு?

தமிழகத்தில்தான் சினிமா ஹீரோக்களையும் அரசியல் தலைவர்களையும் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடும் ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கின்றனர்.
ஆனால், 48 நாள் சினிமா ஸ்டிரைக் முடிந்த நிலையில் அப்பாடா என்று தியேட்டருக்கு சென்ற சினிமா ரசிகர்கள் பலரை 'முடியலடா சாமி' எனக் கூறவைத்திருக்கிறது ஒரு விளம்பரம்.
அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாக அதைவைத்து மீம்ஸ்களையும் ஸ்டேட்டஸ்களையும் நெட்டிசன்கள் குவித்து வருகின்றனர்.
அப்படி என்னதான் விளம்பரம் என்கிறீர்களா? இதோ விளம்பரச் சுருக்கம்..
அந்த விளம்பரத்தின் இறுதியில் மாற்றுத்திறன் கொண்ட பெண் ஒருவர் வீல் சேரில் அமர்ந்தபடி கோயிலுக்கு வருகிறார். அவரிடம் பேசும் தோழி ஒருவர் அரசுப் பணி கிடைத்ததற்காக வாழ்த்து கூறுவதோடு இனி மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என சிலாகிக்கிறார். அப்போது கோயில் அர்ச்சகர் வந்து அர்ச்சனை யாருக்கு என கேட்க உடன் இருக்கும் நபர் செல்வி எனக் கூறுகிறார். அர்ச்சகரை தடுத்து நிறுத்தும் செல்வி அர்ச்சனை என் பேருக்கு அல்ல சாமி பேருக்கு என்கிறார். அர்ச்சகரும் எந்த சாமிக்கு என கேட்கிறார். அதற்கு இவரோ நம்ம தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்.
இப்படி அந்தப் பெண் சொல்லி முடிக்க திரையரங்கில் இருந்த பலரும் குரல் எழுப்புகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் முடியலடா சாமி என்று சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். சிலர் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரை ஒட்டுமொத்த அதிமுகவினரும் கடவுளைப் போலவே போற்றித் துதித்தனர். தனிநபர் துதிக்கு பெயர் பெற்ற கட்சி அதிமுக என்றால் அது மிகையல்ல. ஜெயலலிதாவை அப்படித்தான் துதிபாடினார்கள்.
அம்மா வழியில் ஆட்சி செலுத்துகிறேன் என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அதே பாணியில் தற்போது தனிநபர் துதிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த விளம்பர வீடியோவே இதற்கு சாட்சி.
ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர் க்கு படம் பார்க்க போனவன் எல்லாம் செத்தான்.#EdappadiPalanisamy pic.twitter.com/gPGEoYHAza
— தமிழினியன் (@twits08) April 21, 2018