[X] Close

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரம் காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா, பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி


banner-issue

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:35 am
  • அ+ அ-

நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுகிறது என்றால் காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா, இல்லை பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட யாரும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கக்கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை மீறி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட எஸ்பி சந்தோஷ்கன்மோனி, காஞ்சிபுரம் நகராட்சிஆணையர் மகேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றம் தடைவிதித்த பிறகும் காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்த ஆளுங்கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கேள்வி எழுப்பினர்.

மேலும், ”தடையை மீறி பேனர்கள் வைக்கப்படுகிறது என்றால் காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா இல்லை பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா?. ஆளுங்கட்சியினர் வைக்கின்ற பேனர்களை தடுக்க அதிகாரிகளால் முடியாதா?. அல்லது சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க முக்கிய பிரமுகர்களுக்கென தனிச்சட்டம் உள்ளதா”என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இருவர் மீது வழக்குப்பதிவு

அப்போது அரசு ப்ளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ‘‘அனுமதியின்றி பேனர்கள் வைத்தது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் அச்சிட்ட 2 அச்சகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘சென்னையில் விதிமீறி பேனர்கள் வைக்கப்படவில்லை என அரசால் உறுதியளிக்க முடியுமா? கடந்த மார்ச் 3அன்று எழும்பூரில் போலீஸாருக்கு சொந்தமான ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கூட ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர். எனவே இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close