[X] Close

தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு; 20 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக- தற்காலிகமாக கூட்டணி நிறைவு பெற்றதாக ஓபிஎஸ் அறிவிப்பு


admk-alliance

அதிமுக - தமாகா இடையே நேற்று உடன்பாடு கையெழுத்தானது.படம்:ம.பிரபு

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:30 am
  • அ+ அ-

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக (5), பாமக (7), தேமுதிக (4) மற்றும் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

நேற்று முன்தினம் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் செய்தி தொடர்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், ஜி.கே.வாசனை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல்3.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கிரவுன்பிளாசா நட்சத்திர ஹோட்டலில், அதிமுக- தமாகா இடையில் தொகுதி பங்கீடு ஏற்பட்டது.

அதிமுக தரப்பில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமாகா சார்பில், அதன் தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை முடிவில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் அதிமுக- தமாகா நிர்வாகிகள் கையொப்பமிட்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுகவும் தமாகாவும் கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் தமாகாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தமாகா தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி தற்போதைய நிலவரப்படி தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர் கூட்டணியான திமுக கூட்டணியில் திமுக 20 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ளதுபோல், அதிமுகவும் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அடுத்ததாக, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close