[X] Close

தமிழக காவல்துறையில் ஒரு புரட்சிகர சீர்த்திருத்தம்: இனி குற்ற வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க தனி அமைப்பு


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 19:52 pm
  • அ+ அ-

 

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

''இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தினுடைய தேர்தலும், அதேநாளில் 18 சட்டப்பேரவை தொகுதிகளினுடைய இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலாக இருந்தாலும், ஏற்கெனவே திமுக தன்னுடைய பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் தொடங்கி விட்டது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 12,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் மூலமாக தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கி எழுச்சியோடும், வெற்றியோடும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். எப்படி, 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெற்றோமோ அதேபோன்ற வெற்றியை இந்தத் தேர்தலில் நிச்சயமாக திமுக சார்பில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணி 40-க்கு 40 இடங்களில் உறுதியாக வெற்றி பெறும்.

நியாயமாகப் பார்த்தால் தமிழகத்தில் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய ஒரு நிலை. ஆனால், 3 தொகுதிகளைத் தவிர்த்து, 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கின்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு என்ன காரணம் என்றால், வழக்கு இருக்கிறது என்று இங்கிருக்கும் தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கின்றது. வழக்கு நடந்தால், தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபு ஒன்றும் அல்ல. நான் கேட்க விரும்புவது நீதிமன்றம் ஒன்றும் தடை உத்தரவு போடவில்லையே. இந்த நிலையில் அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?

இதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதனால் தான், இன்றைக்கு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தைப் போட்டிருக்கின்றோம். குறிப்பாக, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக 15 மாதங்களாக, இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் சதி செய்து கொண்டு வந்திருக்கின்றது. இடையில் திடீரென்று திருவாரூர் தொகுதியில் தேர்தல் என்று அறிவித்தார்கள். எந்த விதிமுறையில் இதையெல்லாம் அறிவித்தார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. 

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது. அதனால் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத் தேர்தல் கமிஷனிடத்தில் நேரம் கேட்டிருக்கின்றார்கள். இன்று அல்லது நாளை நேரம் ஒதுக்கித் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவாவும், டி.கே.எஸ்.இளங்கோவனும் சென்று எங்களுடைய கோரிக்கையை மனுவாக வழங்க இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம், அப்படி இல்லையென்று சொன்னால், நாங்கள் உயர் நீதிமன்றத்தையும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையும் நாடுவதற்கு முடிவு செய்திருக்கின்றோம்''. 

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளித்தார். 

திமுக போட்டியிடக்கூடிய தொகுதிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை எப்பொழுது அறிவிக்கப் போகின்றீர்கள்?

காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளோடும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஒப்பந்தம் போடப்பட்டு கையெழுத்து போட்டிருக்கின்றோம். இருந்தாலும், மரபுப்படி அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடைய தொகுதிகளும் முழுமை அடைந்ததற்குப் பிறகு, இன்று இரவு அல்லது நாளை முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தல் அறிக்கையை எப்பொழுது எதிர்பார்க்கலாம்?
தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

வாரணாசியில், மே மாதம் கடைசி கட்டமாக 7-ம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. அதை எப்படி பார்க்கின்றீர்கள்? தேர்தல் முடிவுகள் எண்ணப்படும் 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்படுகின்றது. எனவே, அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா? தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தேதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா இல்லையா?

நீங்களே சந்தேகத்தோடு தான் கேட்கின்றீர்கள். அந்த சந்தேகம் தான் எங்களுக்கும் இருக்கின்றது.

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறக்கூடிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. பாதுகாப்பில் சிரமம் ஏற்படும் என்று எண்ணுகின்றீர்களா?

தேர்தல் கமிஷன் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் பொழுது கோடை வெயில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறக்கூடிய தேர்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றை மனதில் அடிப்படையாக வைத்துதான் தேதியை அறிவித்திருப்பதாகச் சொல்லி இருக்கின்றாரகள். ஆனால், மதுரையில் நடக்கக்கூடிய கள்ளழகர் திருவிழாவைப் பற்றி ஏன் நினைக்கவில்லை என்பது தான் எங்களுக்கு ஒரு சந்தேகமாக இருக்கின்றது. எனவே, இதுகுறித்தும் தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும். இதுசம்பந்தமாக கூட நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

21 இடைத்தேர்தல் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா?

அதுபற்றி ஏற்கெனவே அனைத்துக் கட்சிகளோடும் பேசிவிட்டோம். இப்பொழுது நடப்பது 21 தொகுதிகள் அல்ல 18 தொகுதிகள் தான். இந்த இடைத்தேர்தலைப் பொறுத்த வரைக்கும் திமுக வேட்பாளர்கள் தான் நிறுத்தப்படுவர்.

வாக்காளர் பட்டியல் குளறுபடி காரணமாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து நீங்கள் வழக்கு தொடர்ந்திருந்தீர்கள். போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 நீங்களே அதை ஒப்புக்கொள்கின்றீர்கள். அதை எதிர்த்து புகார் கொடுத்திருக்கின்றோம். மீண்டும் அது குறித்து வலியுறுத்துவோம்.

அதிமுக, தேமுதிக கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

அது கொள்கைக் கூட்டணி அல்ல. திமுக தலைமையில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணிதான் கொள்கைக் கூட்டணி இலட்சியக் கூட்டணி. அதிமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியை பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், வேறு விதமாக சொல்ல வேண்டும். எனவே, அதை நான் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார். 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close