[X] Close

வரும் மக்களவைத் தேர்தலோடு பாஜக, அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: விருதுநகரில் நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாட்டில் ஸ்டாலின் உறுதி


stalin-speech-at-virudhunagar

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாடு நிகழ்ச்சியில் பேசுகிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 08:58 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலோடு மத்திய பாஜக ஆட்சிக்கும், மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

விருதுநகரில் நேற்று திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாவட்டம். 2 முதல்வர்களை தந்த மாவட்டம். பிஎஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜரை தந்த மாவட்டம். தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி, 78 நாள் உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த மாவட்டமும் விருதுநகர்தான். இப்போது நடக்கும் கொள்ளைக்கார கே. பழனிசாமி ஆட்சிக்கும், மத்திய பாசிச பாஜகவின் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

சென்னைக்கு அருகில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. மோடி பேசும்போது, திமுக கூட்டணியை சந்தர்ப்பவாதக் கூட்டணி எனச் சொல்லி இருக்கிறார். காங்கிரஸுடன் இந்திரா காலத்திலும், சோனியாகாந்தி காலத்திலும், தற்போது ராகுல்காந்தி காலத்திலும் கூட்டணி வைத்திருக்கிறோம். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல. இந்த நாட்டுக்கு ஆபத்து வரும் நேரங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்திருக்கிறோம்.

மிரட்டி வைக்கப்பட்ட கூட்டணி

ஆனால், நீங்கள் அமைத்துள்ள கூட்டணியை, எந்த தலைப்பில் அழைப்பது என மோடி பதில் கூற வேண்டும். அதிமுக அமைச்சர்களின் குட்கா ஊழல், சிபிஐ விவகாரங்கள் எங்களிடம் சிக்கி இருக்கின்றன. வருமான வரித் துறை மூலம் ரகசியம் சிக்கி இருக்கிறது, அமலாக்கத் துறையின் மூலம் பல ஊழல்கள் அகப்பட்டிருக்கின்றன. கொடநாடு விவகாரம் இருக்கிறது. இவற்றையெல்லாம் காட்டி மிரட்டித்தானே அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் கூட்டணி என விளக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் மட்டும் வந்து நிற்பவர் மோடி. 130 கோடி மக்கள் எனது குடும்பம் எனச் சொல்லும் மோடி, 130 கோடி மக்களையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார். அவர் செய்துள்ள ஒரே சாதனை ஒரே நாளில் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அனைத்து மக்களையும் நடுத்தெருவில் நிறுத்தியதுதான். சிறுபான்மையினர் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் ஆக்கியவர் மோடி. ஜெ. மீது மோடி திடீர் பாசம்ரயில்வே துறையில் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. அத் துறையில் தமிழகத்துக்கு பெரிய துரோகம் இழைக்கின்றனர். தமிழகத்துக்கு ஜிஎஸ்டி மூலம் வரவேண்டிய ரூ. 4 ஆயிரம் கோடி இன்னும் வரவில்லை.

தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், எந்த முகத்தோடு இங்கு வருகிறீர்கள் என அடுத்தமுறை பிரதமர் வரும்போது மக்கள் கேட்க வேண்டும். குஜராத் மோடியா, தமிழகத்தின் லேடியா என அவருக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. 78 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை பார்க்க வராத மோடி, இப்போது மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார். ஆம் ,மோடி சொல்வது உண்மைதான், ஜெயலலிதா பதவியிலிருந்தபோதே ஊழல் வழக்கில் சிக்கி ஒரு முறையல்ல, 2 முறை சிறை சென்றுஉள்ளார். அவர் இருந்திருந்தால் கோட்டையில் இருந்திருக்க மாட்டார். பெங்களூரு சிறையில் சசிகலாவோடு இருந்திருப்பார். ஜெயலலிதா இறந்ததால்தான் சிறைத் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.

அச்சத்தால் பேசுகிறார்

தமிழகத்தின் நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெறமுடியாத முதலமைச்சர், பதவியை காப்பாற்றிக்கொள்ள வலிந்து போய் பிரதமரை பாராட்டுகிறார். தான் சிறைக்கு போய்விடக்கூடாது என்று அச்சத்தின் காரணமாக முதல்வர் பழனிசாமி பிரதமரை புகழ்ந்து பேசுகிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம்குறைந்துள்ளதாக செய்தி வருகிறது. 5 ஆண்டு நிதியாண்டில் மிக, மிக குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. மிகவும் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது என சொல்கின்றனர். பழனிசாமி எதை வைத்து இந்தியா வளர்ச்சி பெற்றதாகச் சொல்கிறார்.

தம்பிதுரை பேசினாரே..

பாஜகவின் திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துவருவதாகவும், மத்திய அரசிடம் இருந்து பிச்சை எடுக்கும் நிலை வந்திருக்கிறது, தமிழகத்தில் தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத்திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சொன்னார். இது உண்மை தானே. ஆகவே வரும் தேர்தலில் இந்த கொள்ளைக்கார ஆட்சியை தூக்கி எறியுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close