[X] Close

'கொடிபறக்குது’ன்னு பாரதிராஜா டைட்டில் வைச்சாரே; அப்போ தெரியலையா?’ - ஆனந்த்ராஜ் கேள்வி


kodiparakkudhu-title-bharathirajavukku-anandraj-kelvi

  • kamadenu
  • Posted: 19 Apr, 2018 18:07 pm
  • அ+ அ-

ரஜினியை வைத்து படமெடுத்தார் பாரதிராஜா. சூப்பர்ஸ்டார் ரஜினியின் கொடிபறக்குது என்று பேர் வைத்தாரே. ‘பரதேசி’ என்று வைக்கவேண்டியதுதானே...’ என்று ரஜினியை சந்தித்துவிட்டு வந்த நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பினார்.

ரஜினிகாந்தை, போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டோம்’ என்று தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் அன்பு கொண்டவராகத்தான் ரஜினி இருக்கிறார். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல், தெளிவாகத்தான் இருக்கிறார். ரஜினியை கார்னர் செய்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

திடீரென ஒரு இயக்கம் அவரை நோக்கித் திரும்புகிறபோது, எதற்காக? எதை நோக்கி? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். ‘சினிமாவில் போலீஸ்காரரை இவரே அடிக்கிறார். அப்படியிருக்கும்போது போலீஸை அடித்தால் இவரே திட்டுகிறாரா?’ என நிறைய மீம்ஸ், கேள்விகள்... அதை விவாதமாகவே வைக்கிறார்கள். சினிமா என்பது வேறு. நானே நல்ல போலீஸ்காரனாகவும் நடித்திருக்கிறேன், கெட்ட போலீஸ்காரனாகவும் நடித்திருக்கிறேன். அவரும் நல்லவராகவும் கெட்டவராகவும் நடித்திருக்கிறார்.

பாரதிராஜாவைப் பார்த்து நான் கேட்கிறேன்... இந்தக் கேள்வி ஒரு நியாயமான கேள்வி. பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறோம். அந்த நேரத்தில் நாங்களே பேசியிருக்கிறோம். அவரே ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கொடி பறக்குது’ எனத் தலைப்பு வைக்கிறார். ‘இந்தத் தலைப்பு உனக்குப் பொருத்தமாக இருக்காது’ என பாரதிராஜா அப்போதே சொல்லியிருக்கலாமே... ‘கொடி பறக்குது’னு வைக்க முடியாது. வேண்டுமானால் ‘பரதேசி’ என வைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே... ‘பரதேசி’ என்றால் இன்னொரு தேசத்தைச் சேர்ந்தவர்.

எத்தனைத் தேர்தல்களில் அவருடைய ஆதரவு எங்களுக்கு இருந்தது என எனக்குத் தெரியும். இதே போயஸ் கார்டனில் தான் நானும் இருந்தேன். எத்தனைத் தேர்தல்களைப் பார்த்திருக்கிறோம் என எங்களுக்கும் தெரியும். அந்த நேரத்தில் அவருடைய குரல் வந்துகொண்டு தானே இருந்தது. அவரைப் பிரித்துப் பார்ப்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அவர்கள் எதை நோக்கிப் போகிறார்கள் என்பது கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியவரும்” என்றார் ஆனந்த்ராஜ்.

‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், அவருடன் இணைந்து நீங்கள் பணியாற்றுவீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆனந்தராஜ், “முதலில் கட்சி தொடங்குவது குறித்து அவர் முடிவெடுக்கட்டும். அப்படியே அவர் தொடங்கினாலும், அவருடைய ஃபாலோயர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள், மக்கள் இருக்கிறார்கள். முதலில் அவர் முடிவெடுக்கட்டும்” என்றார்.

‘திரைத்துறை போராட்டத்தில் ரஜினி தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே...’ என்ற கேள்விக்கு, “அவர் இதில் தலையிட முடியாது. ஏனென்றால், அதற்கென தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. தன்னுடைய கருத்தை, ஆலோசனைகளை இவர் சொல்லலாமே தவிர, முடிவை அமைப்புதான் எடுக்க வேண்டும். இவர் தன்னுடைய நல்ல கருத்தைச் சொல்லிவிட்டார் என நான் நினைக்கிறேன். ‘சங்கங்களாகச் சேர்ந்து எந்த முடிவெடுத்தாலும், அதற்கு நான் ஒத்துழைப்பு கொடுப்பேன்’ எனச் சொல்லிவிட்டார்” எனப் பதில் அளித்தவரிடம், ‘ரஜினியைச் சந்தித்தது போல் கமல்ஹாசனையும் சந்திப்பீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

“வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். காவல்துறை குறித்த ரஜினியின் கருத்தோடு நானும் ஒத்துப்போனேன். ஒரு நடிகரா நடிகர் சங்கத்தில் போய்ப் பேசமுடியாத மனவேதனையில் இருக்கும்போது, வெளிப்படையாக அவர் பேசியிருக்கிறார். போராட்டத்தில் இதைத்தான் கேட்பார்கள் என்பதால், போராட்டத்துக்குச் செல்லும் முன்பே போயஸ் கார்டனிலேயே அவர் பேசிவிட்டார். அந்தப் பண்பு பிடித்திருந்தது” என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்ராஜ்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close