[X] Close

கர்நாடக அரசுக்கு திடீர் நெருக்கடி: காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகல்; பாஜகவில் இணைகிறார்


bjp

  • நெல்லை ஜெனா
  • Posted: 04 Mar, 2019 11:46 am
  • அ+ அ-

பெங்களூரு

கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடிக்க இரு கட்சி எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி நிலவியதால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.

2-ம் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது காங்கிரஸை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரம் அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக் களுடன் மாநில அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவுடன் தொடர்பு கொண்ட அவர்கள் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மும்பை சென்று தங்கினர். காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைபேசுவதாக முதல்வர் குமாரசாமி புகார் தெரிவித்தார். எனினும் பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு திரும்பி வந்தனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான உமேஷ் ஜாதவ் இன்று திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்துள்ளார். சபாநாயகர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அவர் பாஜகவில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.  

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேசமயம் காங்கிரஸூக்கு 80 எம்எல்ஏகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 37 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close