[X] Close

அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்


ops-speech

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 07:48 am
  • அ+ அ-

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்று துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமை யில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன. இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு தமிழகம், புதுச்சேரியில் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற 26 தொகுதிகளில் 4 அல்லது 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கி, அத்துடன் ஒரு மாநிலங்க ளவை தொகுதியையும் அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 8.30 மணிக்கு வந்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மூத்த அமைச்சர்கள் பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் தவிர அருகே உள்ள சில மாவட்டங்களின் செயலாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம்

கிளாம்பாக்கத்தில் வரும் 6-ம் தேதி நடக்க உள்ள அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர் கள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் குறித்து அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு, கட்சித் தொண்டர் களை அதிக அளவில் வரவழைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கும் ஒப்பந்தம் கையெழுத் தானது. தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

தேமுதிகவிலும் தீவிர ஆலோசனை

இதற்கிடையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் 2-வது நாளாக நேற்றும் வந்தார். பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்களிடம் விஜய காந்த் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அதிமுக - தேமுதிக தரப்பினர் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல் பரவியது. பிரேம லதா, சுதீஷ் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே இந்த பரபரப்பு அடங்கியது.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. எந்த இழுபறியும் இல்லை. இன்னும் ஓரிரு நாளில் சந்தோஷமான, நல்ல முடிவு எட்டப் படும்’’ என்றார்.

அமைச்சர்கள் தீவிரம்

இதற்கிடையில், அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள அமைச்சர்கள் தேமுதிக தரப்பினரை தொடர்பு கொண்டு கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close