[X] Close

மதுரை மக்களவை தொகுதி வேட்பாளரை முடிவு செய்வதில் அதிமுக மேலிடத்தில் யாருடைய செல்வாக்கு எடுபடும்? - அமைச்சர்கள், முன்னாள் மேயர் மல்லுக்கட்டு


madurai-election

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 12:04 pm
  • அ+ அ-

ஒய். ஆண்டனி செல்வராஜ்

அதிமுக கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதி அதிமுகவுக்கே கிடைக்கும் வாய்ப்பு ள்ளது. இதனால், இந்தத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை முடிவு செய்வதில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு இடையே மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் மதுரை தொகுதி யாருக்கு என்று முடிவாவதற்குள் பாஜகவினர் முந்திக்கொண்டு சுவர் விளம்பரம் செய்தனர். அதிருப்தியடைந்த அதி முக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் முறையிட்டனர்.

பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்தால் செய்யட்டும், மதுரையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம், அதிமுகவே போட்டியிடும், அதற்கான தேர்தல் ஆயத்தப்பணிகளில் ஈடுபடுங்கள் என்று இருவரும் கூறியுள்ளனர். இதனால், மதுரை அதிமுகவினர் உற்சாகமாக தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் மாநகரில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளும், புறநகரில் மேலூர், கிழக்கு சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதனால், வேட்பாளரை முடிவு செய்வதில் செல்லூர் கே.ராஜூவின் பரிந்துரை அதிகளவு எடுபட வாய்ப்புள்ளது. முன்பு கட்சிக்குள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் எதிரும், புதிருமாகச் செயல்பட்டனர். கட்சியில் அமைச்சர் ஆர்.பி.உதய குமாரின் அசுர வளர்ச்சியால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் செல்லூர் கே.ராஜூவும், விவி.ராஜன் செல்லப்பாவும் ஒன்றாகிவிட்டனர்.

இருவரும் சேர்ந்து மாநகர், புறநகர் கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் கலந்து கொள் கின்றனர். அதனால், இவர்கள் சேர்ந்து முடிவு செய்யும் நபரே மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக முடியும் என்று கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், ஆர்.பி.உதயகுமார் முதல்வர் கே.பழனிசாமியுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். அதனால், அவரை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

தற்போதைய சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடனே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப்பிடித்து எப்படியும் ‘சீட்’ பெற்றுவிடலாம் என்று கோபாலகிருஷ்ணன் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித் தால் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகிய மூவர் அணியினர் வெற்றிபெற வைப்பார்களா? என்பது சந்தேகமே. ராஜன் செல்லப்பா தனது மகன் ராஜ் சத்தியனுக்கு ‘சீட்’ கேட்பதால் அதற்கு கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கட்சியில் சிறப்பாகச் செயல்படும் இளைஞரை அடையாளம் கண்டு வாய்ப்புக் கொடுங்கள் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘எம்பி கோபாலகிருஷ்ணன், இதுவரை எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. கட்சிக்காரர்களுக்காக ஒரு டெண்டர்கூட அவர் வாங்கிக் கொடுக்கவில்லை. திரும்பவும் அவரை வேட்பாளராக நிறுத்தினால் அதிமுகவினரே வேலைபார்க்க மாட்டார்கள். தற்போது தேர்தல் வந்ததும் அரசியலில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இவரைத் தவிர புதிய வேட்பாளர் அறிவித்தால் மட்டுமே மதுரையில் அதிமுக வெற்றிபெற முடியும். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதய குமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு கட்சிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தால் இவர்களைத் தாண்டி அவர் வெற்றி பெறுவது சிரமம் என்றனர். அதிமுக எம்பி கோபாலகிருஷ்ணன் ஆதர வாளர்கள் கூறியதாவது: எம்பி என்பவர், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து பொதுவானவர்.

அவர் கவுன்சிலர், போல் வார்டு வார்டாகச் செல்ல முடியாது. அவரது பெரும்பணிகள் டெல்லியிலேயே இருக்கும். மேலும், மதுரைக்கான ‘எய்ம்ஸ்’, ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களில் கோபாலகிருஷ்ணன் செய்த சில காய் நகர்த்தல்களாலே மதுரைக்கு இந்தத் திட்டங்கள் கிடைத்தன. இது, கட்சி மேலிடத்தில் இருப்போருக்கும், டெல்லி பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியும். அதேபோல், கோபாலகிருஷ்ணன் மதுரைக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்கும், கட்சியில் உள்ள சீனியர்களுக்கும் தெரியும் என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close