[X] Close

திசை தவறி நிற்கிறார் தினகரன்- நாஞ்சில் சம்பத் பேட்டி


nanjil-sambath-interview

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 09:37 am
  • அ+ அ-

கே.கே.மகேஷ்

தமிழக அரசியல் மேடைகளின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்குச் சென்றார். தினகரன் அணியிலிருந்தார். ஒருகட்டத்தில் அரசியலே வேண்டாம் என்று இலக்கியத்தின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இப்போது, “மோடியை வீட்டுக்கு அனுப்ப இது தக்கதோர் தருணம்” என்று அரசியல் களத்துக்குத் திரும்புகிறார். அவருடன் பேசியதிலிருந்து...

எது உங்களை மீண்டும் அரசியலுக்குள் இழுத்தது?

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்லி இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிற ஆபத்தான சக்திகளிடம் நாடு சிக்கியிருக்கிறது. என்னிடத்தில் இருப்பது பேச்சும், பிரச்சாரமும்தான். 35 ஆண்டு காலப் பொதுவாழ்வில் இடையறாது பேசிவந்த என்னால், வகுப்புவாத சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டும் காணாமல் எப்படியிருக்க முடியும்?

மீண்டும் மோடிதான் ஆட்சியமைப்பார் என்று கருத்துக்கணிப்புகள் வருகின்றனவே?

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பலமாக அடி வாங்கியிருக்கறது பாஜக. மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த பிறகும் பலமாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. ஏழை எளிய, விளிம்புநிலை மக்களின் பொருளாதாரச் சூழலை நிலைகுலையவைத்து ஏழை விவசாயப் பெருங்குடி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிற மோடிக்கு ஆதரவாக இனிமேல் மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பாஜக பலமாக இருப்பதாகச் சொல்லப்படும் குமரி மாவட்டத்திலேயே இம்முறை அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும். ஒக்கி புயல் பாதிப்பை இவர்கள் கையாண்ட லட்சணம், தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பு நீக்கம் என்று இவர்களின் முட்டாள்தனத்தால் பாதிக்கப்படாத மக்களே குமரியில் இல்லை.

கட்சி அரசியலைவிட்டு நான் வெகுதூரம் விலகி வந்துவிட்டாலும், தத்துவ அரசியலிலிருந்து விலகவில்லை. இந்தத் தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வேன்.

இனி வைகோவையும் உங்களையும் ஒரே மேடையில் பார்க்கலாம் அல்லவா?

வைகோவோடு ஒரே மேடையில் பேச வேண்டும்; அவருடன் இணைய வேண்டும் என்பது என் இலக்கல்ல. இந்தப் பாசிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே என் நோக்கம். அதற்காகத் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்வேன். வைகோ போட்டியிடுகிற தொகுதியிலும் நிச்சயமாகப் பிரச்சாரம் செய்வேன்.

அதிமுகவுக்கு எதிராக, 38 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கப்போவதாக சொல்லியிருக்கிறார் தினகரன். அவரை ஆதரிப்பீர்களா?

பாஜக, பாமகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அதிமுகவை தினகரன் எதிர்ப்பது நியாயமே. ஆனால், அவரது நிலைப்பாட்டில் நேர்மையும் இல்லை; கூர்மையும் இல்லை. திக்கற்று நிற்கிறார் தினகரன்!

மோடியை எதிர்க்கிற எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லையே?

தாங்கள் செல்வாக்காக இருக்கிற ஒரு மாநிலத்தில், அந்தந்த மாநிலக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சியின் நலன் கருதி விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பது அரசியலில் இயல்பானதுதான். எனவே, இதை ஒற்றுமையின்மையாகப் பார்க்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி பரவலாக வெற்றிபெறும்போது, அந்தக் கட்சியை வெளியிலிருந்து ஆதரிப்போம் என்ற நிலையில் அனைவரும் ஓரணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கிற வரலாற்று கடமைக்கு, காங்கிரஸ் தலைமை தாங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close