[X] Close

வசை பாடிய வைகோவுடன் திமுக கூட்டு சேரலாம் அதிமுக-பாமக கூட்டணி சேர்ந்தால் தவறா? - அரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு


vaiko-dmk

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 11:39 am
  • அ+ அ-

வசை பாடிக் கொண்டே இருந்த வைகோ-வுடன் திமுக கூட்டணி வைக்கும்போது, அதிமுக-பாமக கூட்டணி சேர்ந்தால் தவறா? என அரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேடு பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் இரவு நடந்த கூட்டத்துக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியது:கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவியது. அதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். மேலும், புதிய பல மின் திட்டங்களையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது.

தமிழகம் முழுக்க அதிமுக அரசு தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது. இனியும் இந்த நிலை தொடரும். அதிமுக அரசு 10 நாட்களில் கவிழும் 6 மாதத்தில் கவிழும் என்று கூறி வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். பாமக, பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக-வை தொடர்ந்து வசை பாடிய வைகோ-வுடன் திமுக கூட்டணி சேரலாம்.

அதிமுக-வும், பாமக-வும் கூட்டணி வைத்தால் மட்டும் சூடு, சொரனை பற்றி பேசுவதா?எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு மக்கள் விரோத அரசா? மத்தியில் திறமையான மற்றும் நிலையான ஆட்சி வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். இவற்றை கவனத்தில் கொண்டு பாஜக-வை ஆதரித்துள்ளோம். சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த, ஆண்டுக்கு ரூ.6000 தொகை நேற்று முன் தினம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விட்டது. மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி வகித்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது? திமுக-வில் குடும்ப அரசியலும், ஆதிக்கமும் தொடர்கிறது. கருணாநிதி குடும்பத்தை தவிர யாரும் பெரும் பதவிக்கு வர முடியாது. அதிமுக-வில் யாரும் எந்த பதவிக்கும் வர முடியும்.

இவ்வாறு பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close