[X] Close

கேள்வி பிறந்தது எதனால்?- அன்புமணியின் செய்தியாளர் சந்திப்பு ஒரு பார்வை


anbumani-press-meet

  • முத்தலீப்
  • Posted: 25 Feb, 2019 17:28 pm
  • அ+ அ-

 


பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் ‘கூட்டணி எதனால்’ என்பது குறித்த செய்தியாளர் சந்திப்பும், அதன் பின்னணியில் எழும் கேள்விகளும் ஒரு பார்வை. 

தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் வித்தியாசமான கட்சியாக  பாமக தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. விட்டுத்தராத அதன் கொள்கை, அரசியல் அனைவரையும் கவர்ந்த ஒன்று. தினமும் மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் அறிக்கையில் என்ன கூறியிருப்பார்கள் என்பதைத்தான் ஊடகங்களும், வாசகர்களும், அரசியல் கட்சிகளும் பார்க்கும்.

அரசியல் கட்சித் தலைவர்களில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை, சமூக அக்கறை, பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையிலெடுப்பது, ஊழல் குறித்த கடும் விமரசனம் என கூர் ஈட்டியாக இருவரது அறிக்கைகளும் இருக்கும். அறிக்கை பொத்தாம் பொதுவாக இல்லாமல் ஆதாரங்களுடன், புதிய தகவல்களுடன் இருக்கும்.

இதற்காக இவ்விரு தலைவர்களுக்கும் உதவ தனி நிபுணர் குழுவே இயங்கும். ஒரு பிரச்சினையின் அடிமுதல் நுனிவரை சாதக பாதகங்களை அலசி இருவர் அளிக்கும் அறிக்கை பல நேரம் பலருக்கும் பயன்பட்டுள்ளது. சில தலைவர்கள் இவர்களது அறிக்கையை ஒட்டி தங்கள் அறிக்கையை மறுநாள் வெளியிடும் அளவுக்கு விவாதத்தைக் கிளப்பும் விதமாக அறிக்கை அமையும்.

மதுவிலக்கு, குட்கா முறைகேடு, எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் போராட்டம், அறிக்கைகள் பொதுமக்களை விழிப்படையச் செய்தது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளில் இருவரது போராட்டக் குணம் பொதுமக்கள் அறிந்தது. அன்புமணி ராமதாஸ் ஒருபடி மேலே சென்று புகைப்பழக்கம், போதைப் பழக்கத்துக்கு எதிராகப் போராடும் தலைவர்.

பொதுவாக சொல்லப்போனால் தமிழகத்தில் மாற்று அரசியல் என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு பார்வை உண்டு. அதைப் போன்ற ஒரு பார்வை பாமகவுக்கும் உள்ளதாக நம்பப்படுகிறது. 

இந்த சூழலில் அதிமுக- பாமக கூட்டணி ஏன்  என்பது குறித்த செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி எதிர்கொண்ட கேள்விகள் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஆனால், ஊடகங்கள் குறித்து எனக்குக் கவலையில்லை, மக்கள் ஆதரவு உண்டு என்று அன்புமணி பதிலளித்ததன் மூலம் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கேள்விகள் எழுந்ததன் பின்னணி என்ன? 

மேற்கண்ட விவகாரங்களில் பல ஆண்டுகள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எடுத்து வைத்த வாதங்கள், எழுப்பிய கேள்விகள், தொடங்கி வைத்த விவாதங்களில் இவ்விரு தலைவர்கள்  மீதான நம்பிக்கை, கேள்விகளாகத் திரும்பின. பெருவாரியான இளம் தலைமுறையினர், பாதிக்கப்படும் பொதுமக்களின் குரலாக இவர்கள் கை நீட்டியதால் ஏற்பட்ட நம்பிக்கை, யாருக்கு எதிராக கை நீட்டினார்களோ அவர்களுடன் இணையும்போது கேள்விகளாக எதிர்ப்பட்டன.

இதில் ஊடகங்கள் குறித்து கவலை இல்லை, கேள்வி கேட்ட செய்தியாளர் ஏன் கோபப்படுகிறார், அவருக்கு தண்ணீர் கொடுங்க என்றெல்லாம் அன்புமணி சமாளித்த நிகழ்வும் நடந்தது. ஒரு கட்டத்தில் பேச அனுமதிக்காவிட்டால் எழுந்து செல்லவும் தனக்கு உரிமை உண்டு என்றும் அன்புமணி பதிலளித்தது விநோதமாக இருந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அன்புமணி,  விமர்சியுங்கள் விமர்சனம் செய்ய உரிமையுண்டு என்று சொல்லி, பக்குவமான ஒரு அரசியல் தலைவராக கேள்விகளை எதிர்கொண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதுபோன்ற விமர்சனங்கள் செய்தியாளர் சந்திப்பில் மற்ற அரசியல் கட்சிகள் நடத்தும்போதும், மற்ற தலைவர்களிடமும் வைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுவதையும் மறுக்க முடியாது.

ஆனால், முன்னரே குறிப்பிட்டதுபோன்று இவர்கள் ஊட்டிய நம்பிக்கை அரசியலே கேள்வியாகத் திரும்புகிறது.  பாமக யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என சொல்ல ஊடகங்களுக்கு உரிமை இல்லை. அதே நேரம் மக்கள் மனதில் உள்ள கேள்விகளைக் கேட்பது ஊடகங்கள் நிலையாக உள்ளது. அதற்கான தளம் செய்தியாளர் சந்திப்பு. அதை எதிர்கொள்வதுதான் பிரச்சினை.

5 ஆண்டுகள் அவர்கள் விதைத்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கேள்விகள் எழுகின்றன. கேள்வி பிறந்தது எங்கே என்றால், 5 ஆண்டு கால போராட்டத்திலும், 2011-க்குப் பிறகு எடுத்த கொள்கை முடிவும் அது சார்ந்த அரசியலினால் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையிலிருந்து கேள்விகள் எழுகின்றன. இது ஊடகங்கள் எழுப்பும் கேள்வியாக ஒதுக்கிவிட முடியாது.

செய்தியாளர்கள் கேட்க மறந்த சில கேள்விகளும் உண்டு. பத்து கோரிக்கைகள் அரசுக்கும் அதிமுக தலைமைக்கும் வைக்கப்பட்டுள்ளது. அதில் உடனடியாக இன்றே நிறைவேற்றப்படும் நிலையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்  எது தடையாக உள்ளது.

10 கோரிக்கைகள் பாமக தரப்பில் வைக்கப்பட்டாலும் அதிமுக தலைமை அதுகுறித்த எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை. இதுபோன்ற பல கேள்விகள் அடுத்தடுத்த நாட்களில் வரலாம். அதற்கு அளிக்கப்படும் நியாயமான விளக்கங்கள் மூலமே மக்கள் ஆதரவும் கிடைக்கும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.

காரணம், பத்தாண்டுகளுக்கு முன், 15 ஆண்டுகளுக்கு முன் பேசியது கண்டுகொள்ளப்படாது. ஆனால் இன்று டிஜிட்டல் காலகட்டம். இப்போது அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. அனைத்தையும் அனைவரும் கவனிக்கிறார்கள். உடனடியாக பதிலும் வந்துவிடுகிறது. 2 கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் டிஜிட்டல் யுகத்தில் கிடைப்பதை வைத்தே அரசியலைத் தீர்மானிக்க உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. 

  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close