[X] Close

பாமக, மதிமுகவுக்கு ‘மாம்பழம்’, ‘பம்பரம்’ கிடைக்குமா?


pmk-mango

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 08:39 am
  • அ+ அ-

பாமகவும், மதிமுகவும் கடந்த தேர்தல்களில் குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளைப் பெறாததால் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்துள்ளன. இதனால், இக்கட்சிகளுக்கு மாம்பழம், பம்பரம் சின்னம் கிடைப்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத்தான் அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். ஒரு கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு தேவையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி, ஒரு கட்சி மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலாக இருந்தால் 25 தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும்.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதுடன், ஒரு மக்களவைத் தொகுதி, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்தான் அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த அடிப்படையில், தமிழகத்தில் பாமகவும், மதிமுகவும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருந்தன. அதனால், பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், கடந்த தேர்தல்களில் இந்த இரு கட்சிகளும் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை. அதனால், 2010-ம் ஆண்டு மதிமுகவும், 2011-ம் ஆண்டு பாமகவும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்தன. அதைத் தொடர்ந்து மாம்பழம், பம்பரம் ஆகிய சின்னங்கள் சுயேச்சை சின்னங்களாகிவிட்டன.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாமக மாம்பழம் சின்னத்தையும், மதிமுக பம்பரம் சின்னத்தையும் கோரும்போது, சுயேச்சைகளும் இந்த சின்னங்களைக் கேட்கலாம். அவ்வாறு கேட்டால் இரு கட்சிகளுக்கும் தங்களது சின்னங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

சின்னம் ஒதுக்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தங்களுக்கு தேவையான சின்னத்தை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கோரலாம். அப்போது பாமகவும், மதிமுகவும் தங்களது சின்னங்களைக் கோருவார்கள். அக்கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கும்பட்சத்தில், மாம்பழம், பம்பரம் சின்னம் அவர்களுக்கு கிடைக்கலாம். கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

இக்கட்சிகள், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்துவிட்டதால், தேர்தல் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதேநேரம், 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்றதால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தது. 2014 மக்களவைத் தேர்தலில் 5.19 சதவீத வாக்குகளும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் 2.39 சதவீத வாக்குகளும் பெற்றது. அதனால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தேமுதிகவுக்கு உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலிலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைப் பெற்றால்தான் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தையும், முரசு சின்னத்தையும் தேமுதிக தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close