[X] Close

கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டுக்கொடுக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக


admk-coalition

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 10:33 am
  • அ+ அ-

மக்களவை தேர்தலில் கூட்டணியின் பலத்தை பெரிதாகநம்பியுள்ள அதிமுக, தொகுதி ஒதுக்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தர முடிவெடுத்துள்ளது.

இதற்காக சில தொகுதகளை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ள அதிமுக, கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடையாமல் இருக்க மூத்த அமைச்சர்கள் மூலம் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட ஜெயலலிதா முடிவெடுத்தார். 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி, சாதனையும் படைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதுபோன்ற நிலைமை இல்லை. அதனால், கூட்டணியின் பலத்தை அதிமுக பெரிதாக நம்புகிறது.

அதிமுக கடந்த 19-ம் தேதி ஒரே நாளில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து, பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அது மட்டுமின்றி, 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முழு ஆதரவு என்ற உறுதியையும் பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கூட்டணி முடிவான பிறகு, 20 முதல் 22 தொகுதிகளில் போட்டியிட அதிமுக முடிவெடுத்துள்ளது. இதில், கூட்டணி கட்சிகள் கேட்கும்தொகுதிகள் சிலவற்றில் தங்களுக்கு வாய்ப்பு இருந்தாலும்கூட, கூட்டணி நலன் கருதி அந்ததொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் அதிமுக முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, விருப்ப மனு தாக்கல் செய்துள்ள தற்போதைய எம்.பி.க்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடையாதவாறு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கொங்குமண்டல அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பாஜகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் அதை ராமநாதபுரம் எம்.பி.யான அன்வர்ராஜா எதிர்த்ததாக தகவல் வெளியானது. அவர் தனது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், முதல்வர்பழனிசாமி அவரை சமாதானப்படுத்தி, பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்துள்ளார். அதேபோல, தென்சென்னை தொகுதியை குறிவைத்து அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் விருப்ப மனு அளித்துள்ளார். அந்த தொகுதி அனேகமாக பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்பதால், அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி அதிமுக நிர்வாகி கூறியதாவது:அதிமுகவில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், அமமுக, திமுகஆகிய கட்சிகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுவிடும். எனவேதான், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிஒதுக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போதைய எம்.பி.க்களில் சிலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். ஒருவேளை, அவர்களது தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க நேரிட்டால், அவர்கள் அதிருப்தி அடையக்கூடும். எனவே, அவர்களிடம் இப்போதே மூத்த அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதுசம்பந்தமாக முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் 20-ம் தேதி ஆலோசனை நடத்தினர். பின்னர், துணை முதல்வருடனும் அவர்கள் ஆலோசனை நடத்திவிட்டு, சிலஎம்.பி.க்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close