[X] Close

பாஜகவிடம் கற்றுக்கொண்ட தேர்தல் உத்திகளையே நான் பயன்படுத்துகிறேன்: அகிலேஷ் யாதவ்


i-learnt-poll-tactics-from-the-bjp-and-i-m-using-the-same-formula-akhilesh-yadav

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Feb, 2019 20:29 pm
  • அ+ அ-

பாஜகவிடம் கற்றுக்கொண்ட தேர்தல் உத்திகளையே நான் பயன்படுத்துகிறேன் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தேர்தல் கூட்டணி, மக்களவை தேர்தல் வியூகம் என பல்வேறு கேள்விகள் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின் சாராம்சம்:

மாயாவதியுடன் தேர்தல் கூட்டணி அமைந்தது எப்படி?

2018 இடைத்தேர்தல்தான் இந்த கூட்டணிக்கு வித்திட்டது. யோகி ஆதித்யநாத் அதுவரை தோல்வியே கண்டிராத தொகுதியைக் கைப்பற்ற நான் எண்ணினேன். யோகியால் அந்த இடத்தை முஸ்லிம் எதிர்ப்பு நிலைபாட்டால் வெல்ல முடியும் என எனக்குத் தெரியும். அதனால் அந்தத் தொகுதியில் நிஷாத் கட்சித் தலைவரின் மகனுக்கு ஒதுக்கினேன். எனது கட்சி வாக்குகள் எல்லாம் நிஷாத் கட்சிக்கு ஆதரவாக விழுந்தன. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற்றேன். அவர்கள் வாக்கும் எங்களுக்கு சாதகமாக அமைந்தன. நாங்கள் அந்தத் தொகுதியில் வெற்றி கண்டோம். இடைத்தேர்தல் எங்கள் கூட்டணிக்கு அடித்தளமிட்டது.

2014, 2017 தேர்தல்களில் பாஜக நாங்கள் கூட்டணி ஏதும் வைத்துக்கொள்ளவில்லை என்றே பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், உத்தரப் பிரதேசத்திலேயே பாஜக ராஜ்பாரின் சுஹல்தேவ் பாரதி சமாஜ் கட்சி, அப்னா தல் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தனர். பின்னர் சாதி அடிப்படையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களிடம் பிளவை ஏற்படுத்தினர். தங்கள் கட்சியின் மாநில தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தேர்வு செய்தனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரே உ.பி முதல்வராவார் என்று போலி வாக்குறுதி கொடுத்தனர். பாஜகவின் வாக்கு சதவீதமோ அதிகமாக இருந்தது. அதனால் கூட்டணி தவிர பாஜகவை தடுக்க எங்களுக்கு வேறு அரசியல் வாய்ப்பு தெரியவில்லை.

அப்படியென்றால் கோரக்பூர் உத்தி பரிசார்த்த முறையில் செய்து பார்க்கப்பட்டதா?

ஆனால் அந்த சோதனை கோரக்பூர் மட்டுமல்லாமல் பூல்பூர், கைரானா, நூர்பூர் என நான்கு தொகுதிகளில் பலன் கொடுத்ததே. நான் எனது கட்சிக்காரரை வேட்பாளராக்குவதற்கு பதிலாக ராஷ்ட்ரிய லோக் தள கட்சிக்கு விட்டுக்கொடுத்தேன்.கோரக்பூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டோம். கைரானாவில் அடிகுழாய் சின்னம். இதுபோன்ற அரசியல் எனக்கு முதன்முறை. நான் நிறையவே இதற்காக வேலை செய்தேன். அதேவேளையில் சில எண் கணிதமும் தேர்தலுக்குத் தேவை. இதைத்தானே பாஜகவும் செய்தது.

அடிப்படையில் பாஜகவின் தேர்தல் உத்திகளை பயன்படுத்துவதாகக் கூறுகிறார்களா?

உண்மையில், இதை நான் பாஜகவிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்கள் உத்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறேன்.

 
உத்தரப் பிரதேச தேர்தல் முழுக்க முழுக்க எண் கணிதம் என்கிறீர்களா?

எண் கணிதமும் கடின உழைப்பும் சேர்ந்தது என்பேன். மக்களவையில் பிரதமர் மோடி என்ன பேசுகிறார் என்பதை நாம் கூர்ந்து கவனித்தால் அவர் தான் செய்த வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பது தெரியும். டாக்ஸி ஓட்டுனர்கள், வியாபாரிகள் என நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பேசுகிறார். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வாக்கு சேகரிக்கும்போது இப்படி வேலைவாய்ப்பு பற்றி பாஜக வாக்குறுதி கொடுக்கவில்லை. மதவாத அடிப்படையிலேயே உ.பி. தேர்தலை சந்தித்தது. 2017-ல் மோடி ஒரு முறை பேசும்போது உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜான் வேளையில் தீபாவளி பண்டிகையைவிட அதிகமான மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறினார். இதுதான் அவர்கள் தேர்தல் அரசியல். இதனை நிறைய இடங்களில் அவர் பேசியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ஒரு விநோத தேர்வு நடக்கும். இங்கு தோற்பவர்கள்தான் வெற்றியாளர்கள். வெற்றி வெறுபவர்கள் உண்மையில் தோல்வியுற்றவர்கள்.
 
பகுஜன் சமாஜ் கட்சியுடனான 25 ஆண்டுகால சர்ச்சையை 25 நிமிடங்களிலேயே கலைந்துவிட்டதாகக் கூறினீர்கள். அந்த 25 நிமிடங்களில் நடந்தது என்ன?

இதுதான் உண்மை. ஒரு கட்சியுடன் உங்களது உறவை வளர்த்தெடுக்க விரும்பினீர்கள் என்றால் அங்கு புகார்களையும் நிபந்தனைகளையும் பெரிதாக்கக் கூடாது. இலக்கு மட்டுமே பெரிதாக முன்னிற்க வேண்டும். பாஜக நாட்டு மக்களை சாதி, மத ரீதியாக பிரித்து வைத்திருக்கிறது. இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. எனது பெரிய இலக்கு என்னவென்றால் இத்தகைய கொள்கை கொண்ட பாஜகவை அப்புறப்படுத்துவது என்பதே. மாயாவதிக்கு அதனால் எவ்வித நிபந்தனையும் நான் விதிக்கவில்லை. அதன்பின்னர் என்ன நடக்கும்? பேச்சுவார்த்தை சுமுகமாகிவிட்டது.

மாயாவதி தரப்பிலிருந்து ஏதாவது நிபந்தனை இருந்ததா?

மாயாவதி தரப்பிலிருந்தும் எந்த நிபந்தனையும் இல்லை. எனது பக்கத்திலிருந்து எதுவும் இல்லாததால் அங்கிருந்தும் நிபந்தனைகள் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்கும்.

உங்களுக்கு ராகுல் காந்தியுடன் இணக்கம் உண்டும். 2017 தேர்தலை ஒருசேர சந்தித்தீர்கள். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு இந்த கெமிஸ்ட்ரி வேலை செய்யாமல் போனது எப்படி?

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு காங்கிரஸுடையது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களில் அந்த வாய்ப்பு காங்கிரஸுக்கு இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே எங்கள் கட்சி அமைப்பு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் நினைத்திருந்தால் அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்திருந்திருக்கலாம். யாருக்கு எத்தனை சீட் என்பது பின்னர் பார்க்கப்பட வேண்டிய பிரச்சினை. 
இருந்தும்கூட மத்தியப் பிரதேசத்தில் ஆதரவு தேவைப்பட்டபோது காங்கிரஸின் பல்வேறு தலைவர்களும் எங்களைத் தொடர்பு கொண்டனர். நாங்களும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு அளித்தோம். எங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி என்றனர், நானோ நல்ல வேளை நீங்கள் எங்கள் எம்.எல்.ஏ.,வை அமைச்சராக்கவில்லை ஏனெனில் நமது பாதைகள் வெவ்வேறு என்றேன். 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஒரு வாய்ப்பை நழுவவிட்டுவிட்டது.
 
அதற்கு காங்கிரஸின் அணுகுமுறையே காரணம் என்கிறீர்களா?
 
அணுகுமுறையில் குறைபாடு என்று சொல்லமாட்டேன். தனித்து போட்டியிடுவதை அவர்கள் உத்தியாகப் பார்க்கின்றனர் என்பேன். பாஜக தேசத்துக்கு பெரும் சேதத்தை செய்திருக்கிறது. பாஜகவுக்கு எதிரான இந்தப் பெரிய போராட்டத்தில் நாங்கள் இணைந்து உதவியாக இருக்க விரும்புகிறோம். ஆனால், காங்கிரஸுக்கு எங்கள் உதவி தேவைப்படவில்லை. அவர்கள் கட்சியை வளர்க்க விரும்புகின்றனர். நான் 40 தொகுதிகளை தியாகம் செய்திருக்கிறேன், மாயாவதியும் 40 தொகுதிகளை தியாகம் செய்திருக்கிறார். எல்லாம் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண்பதற்காக.
 
காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறதா?

நீங்கள் குறிப்பிட்டதுபோல் அவர்கள் தேசிய கட்சி. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் அவர்களுக்கு பலமில்லை. எங்களது குறிக்கோள் பாஜக வெற்றி பெறக்கூடாது என்பதே. நாங்கள் செய்யும் எதுவும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது. அதனால், காங்கிரஸுடன் உடன்பாடு என்பது இந்த தருணத்தில் சிக்கலான விஷயமாக இருக்கிறது.

பிரியங்காவின் தாக்கம் எத்தகையதாக இருக்கும்?

இப்போதைக்கு எதையும் சொல்வதற்கு இல்லை. உத்தரப் பிரதேச வாக்காளர்கள் விவேகமானவர்கள் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

2019-ல் பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்தால் அதனால் தேசத்தை சமுகமாக வழிநடத்தி பலமான தலைமையைக் கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறதே?

இதற்கு முன்னதாக பல்வேறு அரசுகள் கூட்டணி ஆட்சியில் இயங்கியிருக்கின்றன. அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஒரு கூட்டணி அரசுதான். மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இப்போது ஆட்சியில் இருப்பதும்கூட கூட்டணி ஆட்சி தான் அது பாஜக அரசு அல்ல தேசிய ஜனநாயக கூட்டணி அரசு.

ஆனால், அவர்கள் கூட்டணி அரசாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு முகம் அடையாளமாக இருக்கிறது. மோடி இருக்கிறார். அவர்களைப் போல் பறைசாற்றிக் கொள்ள உங்களுக்கு யார் இருக்கிறார்கள்?

மன்மோகன் சிங்கின் பெயரை கூட்டணிக் கட்சிகள் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. கூட்டணி ஆட்சிகள் இருந்தாலும்கூட வெற்றி பெற்றிருக்கின்றன. இங்கே முக அடையாளம் முக்கியமல்ல. எந்த நேரத்திலும்கூட ஒரு முகத்தை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். முகம் தான் முக்கியமென்றால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இப்போது பாஜக தூக்கிப் பிடிக்கும் முகம் தோல்வியடைந்துவிட்டால் அவர்களுக்கு இருக்கும் மாற்று என்னவென்பதை அவர்கள் தெரிவிக்க முடியுமா?
 
அப்படியென்றால் அப்படி ஒரு அடையாளம் இல்லாதது பாஜக எதிர்ப்பு அணிக்கு பின்னடைவு என நீங்கள் கருதவில்லையா?

என்னிடம் இதற்கு ஒரு பதில் இருக்கிறது. நமது மாநிலத் தலைவர்களை எல்லாம் நீங்கள் அடையாளமாகவே கருதவில்லையா? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மற்ற எந்தவொரு தேசியத் தலைவரையும்விட சிறப்பாக அடையாளப்பட்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் நானும் மாயாவதியும் இருக்கிறோம். தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பொருத்திருந்து பாருங்கள், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவைவிட பிராந்திய கட்சிகளே அதிக இடங்களைப் பிடிக்கப் போகின்றன.

உங்களுக்கு பிரதமர் கனவு இருக்கிறதா?

இல்லை. ஆனால், ஒரு புதிய பிரதமரை உருவாக்கி ஆதரிக்கும் கனவு இருக்கிறது. அந்தப் பிரதமர் எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால், அப்படி ஒரு பிரதமர் உத்தரப் பிரதேசத்தில் உருவானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

இந்த தேசத்துக்கு ஒரு தலித் பிரதமர் கிடைப்பார், அதுவும் அவர் பெண்ணாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

ஏன் இருக்கக் கூடாது. அப்படி நடந்தால் காங்கிரஸ்கூட ஆதரவுக்கரம் நீட்டும்.

இது ஒரு அனுமானம்தான். ஒருவேளை மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உங்கள் கட்சி பெற்ற வாக்குகள் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. உங்களுக்கும் மாயாவதிக்கும் சேர்த்து 50 முதல் 60 சீட்கள் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும்கூட நீங்கள் பெண் தலித் பிரதமர் தேவை என முன்மொழிவீர்களா?

அதை இப்போதே சொல்ல முடியாது. எனது இப்போதைய இலக்கெல்லாம் நாங்கள் கூட்டாக அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதே.

யாதவர்களுக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் இடையேயான இத்தனை ஆண்டு கால மோதலின் எதிரொலியாக உங்கள் கூட்டணிக்கு வாக்குகளை சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்காது எனக் கூறப்படுகிறதே?

கடந்த தேர்தலிலேயே இதை சோதனை செய்துவிட்டோம் என்றேனே. அப்போது வாக்குகள் கிடைத்தன. இனியும் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரத்தை தூண்டத்தானே செய்யும். அதுவும் பாஜக ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.

உத்தரப் பிரதேச வாக்காளர்களை உங்கள் கூட்டணியா அல்லது எது ஊக்குவிக்கும் என நினைக்கிறீர்கள்?

மக்களுக்கு மிகப்பெரியளவில் அநீதி நடந்து கொண்டிருக்கிறது.  சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்று அரசுப் பணியில் யாரையாவது அடையாளம் கண்டுவிட்டால் உடனே அரசு இயந்திரம் முழுவதும் யாதவர்களாகவே இருக்கின்றனர் எனக் கூறுகின்றனர். யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகமாக இருக்கின்றனர் எனக் கூறுகின்றனர். எங்களது அரசாங்கம் யாதவ சமுதாய அரசாங்கம் என விமர்சிக்கின்றனர். ஒரே ஒருவர் யாதவராக இருந்தாலும்கூட அவருக்கு அநீதி இழைக்கின்றனர். இந்த அநீதியால்தான் இப்போது யாதவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்த ஒற்றுமை வாக்குகளைப் பெற்றுத்தரும்.

இன்னொன்றும் இருக்கின்றது. பாஜக அரசு உத்தரப் பிரதேசத்தில் அரசு இயந்திரத்தில் எத்தனை பேர் யாதவர்கள் எனக் கணக்கெடுக்க ஒரு ஆணையத்தையே நியமித்தது. அந்த அறிக்கை வெளியாகிவிட்டது. ஆனால், அதனை வெளியிட அரசு மறுக்கின்றது. யாதவர்கள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அரசுப் பணியில் இல்லை என்பதே உண்மை. குர்மி சமூகத்தினரே அரசுப் பணியில் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஜாட்கள் உள்ளனர். யாதவர்கள் மீது அப்படியொரு வெறுப்பு இருக்கிறது. அலகாபாத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம்கூட அத்தகைய வெறுப்பின் விளைவே. 
 
அலகாபாத் செல்வதிலிருந்து நீங்கள் ஏன் தடுக்கப்பட்டீர்கள் என நினைக்கிறீர்கள்?

கடந்த சில தேர்தல்களில் ஏபிவிபி மிகக்கடுமையான தோல்விகளை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சமாஜ்வாதி வேட்பாளர் வென்றது தெரிந்ததுமே ஏபிவிபியினர் வன்முறையில் இறங்கினர். இதுவரை அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் ஒருவர்கூட பிடிக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வரக்கூடாது என்று கெடுபிடி விதித்துக் கொண்டே.. மறுபுறம் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு பிரதமர்கள், நிறைய முதல்வர்கள், எம்.பி.க்கள் தலைவர்கள் உருவாகியிருப்பதாக பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

நீங்களும் மாயாவதியும் ஒரே மாதிரியான தேர்தல் அறிக்கையே வெளியிடுவீர்களா?

ஒரு சில விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம்.

விவசாயிகள் பிரச்சினை பெரிதாக எதிரொலிக்குமா?

நிச்சயமாக. இரண்டாவதாக வேலைவாய்ப்பின்மை எதிரொலிக்கும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். படித்தவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது. பாஜகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் சாதியும், மதமும் கைகொடுக்கும் என்றாலும் கூட பாஜக பொய்யுரைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறீர்களா?

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏதோ பிரச்சினையிருக்கிறது என்றளவில் மக்கள் மத்தியில் தகவல் சென்றடைந்திருக்கிறது. உண்மை என்னவென்பதை காலம் சொல்லும். ஆனால், வேலைவாய்ப்பின்மையும், விவசாயிகளின் துயரமுமே தேர்தலில் பெருமளவில் எதிரொலிக்கும்.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ராமர் கோயில் சர்ச்சைய கைவிட்டது ஏன் எனக் கருதுகிறீர்கள்?

பாஜக, மக்கள் மத்தியில் ஏதோ ஒருவித விழிப்புணர்வு வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டுள்ளது. ராமர் கோயிலை எழுப்பவதிலுள்ள பிரச்சினைகளும் துயரங்களும் பெரியது. இதை இப்போதைக்கு அவிழ்க்க முடியாது.

- அமித் பாருவா, ஒமர் ரசீது

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close