[X] Close

கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை!


kandhar-sasti-kavasam

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 13:38 pm
  • அ+ அ-

இது திப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்  கதித்து ஓங்கும்’ எனத் தொடங்கும் கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேறிய புண்ணியதலம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சென்னிமலை முருகன் கோயில், 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக் கோயிலாகும். ஸ்ரீஅருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற தளம், 18 சித்தர்களுள் ஒருவரான புன்நாக்கு சித்தர் வாழ்ந்து  முக்தியடைந்த திருத்தலம் இது.

அனந்தன் என்ற நாகார்ஜுனனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த பலப் பரிட்சையில், மேருவின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று, பூந்துறை நாட்டில் விழுந்தது. அந்த சிகரப்பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் சிவாலயச் சோழர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சென்னிமலைக்கு வந்தபோது,  முருகப் பெருமானே அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளிய வரலாறும் உண்டு.

சிவமறையோர் குலத்தில் பிறந்து, சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர், சிரகிரி வரலாற்றை எழுதியபோது, முருக்கடவுள்  காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி இந்த மலைமேல்  உள்ளது.

சென்னிமலையில் வீற்றிருக்கும் தண்டபாணி மூர்த்தி திருமுகம், பூரணப்பொலிவுடனும், இடுப்புக்கு கீழ் திருப்பாதம் வரை வேலைப்பாடற்றும் காணப்படுகிறது.

இந்த மலையின் ஒரு பகுதியில் காராம்பசு தினமும் பால் சொறிய விட்டதைக் கண்ட பண்ணையார், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்துள்ளார். அபோது  பூர்ண முகப்பொலிவுடன் ஒரு கற்சிலை கிடைத்தது. அந்த விக்ரஹத்தின் இடுப்புவரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத  பொலிவுடனும் இருந்தது. ஆனால்,  இடுப்புக்கு கீழ், பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது.  அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால்  சரி செய்தபோது,  சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீவள்ளி, தெய்வானை தேவியர் இருவரும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு  தனிக்கோயிலாக வீற்றிருப்பதும், வேறெங்கும் காணாத அதிசயமாகும். சென்னிமலையில் மூலவருக்கு  ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகமும், இதர நேரங்களில் உற்சவருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது.

மூலவர் சிறப்பு

மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக, செவ்வாய் அம்சமாக அமைந்தும், மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களில் எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவகிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய் பரிகாரச் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, கோயிலால் பராமரிக்கப்பட்டு வரும்  இரண்டு அழகிய பொதிக்காளைகள் மூலம் தினசரி அடிவாரத்திலிருந்து திருமஞ்சன தீர்த்தம் 1,320  திருப்படிகள் வழியாக மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இது தமிழகத்தில் வேறெங்கும் இல்லாததொரு தனிச்சிறப்பு. அமாவாசை, சஷ்டி, கார்த்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு  வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவ தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.  தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரமும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்

சென்னிமலையில்  உள்ள 1320 திருப்படிகளையும் இரட்டை மாட்டு வண்டி ஏறிய அதிசயம் 1984 பிப்ரவரி 12-ல் நடந்தேறியது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு  ஒருமுறையும், வறட்சியான  கோடைகாலத்தில் மலைக்கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள மாமாங்க தீர்த்த விநாயகர் முன்பு மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தோடுவது சிறப்பாகும்.

ஆதிபழநி என சான்றோர்களால் வழங்கப் படும் சென்னிமலை திருத்தலத்தில் முருகப்பெருமான் பாலமுருகனாக வீற்றிருப் பதால், தேவியர் இருவரும் தவக்கோலத்தில் வீற்றிருக்கின்றனர். சந்தான பாக்கியம் வேண்டி பச்சரிசி மாவு இடித்து,  தீபமேற்றி வழிபடுவதும், சன்னதி முன் தாலிச் சரடு கட்டிக் கொள்வதும் தொன்றுதொட்டு நடைறுகிறது.

ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள்

முருக பக்தர்களால் மனமுருகி பாராயணம் செய்யும்  ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் இயற்றிய ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள், காங்கயம் அருகேயுள்ள  மடவிளாகத்தைச் சேந்தவர்.  மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தரில் ஒருவரான இவர், சிறந்த முருக பக்தர். இவர், சென்னிமலை கோயிலில்தான் கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்துள்ளார்.

இக்கோயிலில் வளர்பிறை சஷ்டித் திருநாளிலும், ஐப்பசி மாத கந்தர் சஷ்டி திருவிழா  நாட்களிலும், பக்தர்கள் சந்தான பாக்கியம் வேண்டி விரதமிருக்கின்றனர். அதேபோல, ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இங்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி அருள்பெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கோயிலுக்கு  வரும் பக்தர்கள்,  மனதில் தோன்றும் குழப்பங்களுக்குத் தீர்வு காண, சென்னிமலை ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து, சிரசுப்பூ உத்தரவு கேட்டு, மன நிறைவுடன்  செல்கின்றனர். இங்கு வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மரத்தேர் உலா மற்றொரு சிறப்பம்சம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close