[X] Close

அப்பாவியானந்தாவும் நாலே நாலு கேள்வியும்!


appaviyanadha

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 12:59 pm
  • அ+ அ-

சில நிகழ்வுகளும் சிலரின் பேச்சுகளும் குண்டக்கமண்டக்க குழப்பங்களை ஏற்படுத்த, ’இந்த வெயிலைக் கூட தாங்கிக் கொள்ளலாம் போல. இந்த அரசியல் சரியான மண்டைக்குடைச்சலா இருக்குதே!’ என்று அலுப்பும்சலிப்புமாகச் சொல்கிறார் அப்பாவியானந்தா.

சுடச்சுட... ஸாரி... குளிரக்குளிர ஒரு டம்ளர் மோர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய பிறகு அப்பாவியானந்தா தன்னைக் குடையும் கேள்விகளைப் பட்டியலிட ஆரம்பித்தார்.

1. மவுனமா ஏன் போராடணும்?

சினிமாக்காரங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு போராடினாங்க. ரொம்ப சந்தோஷம்தான். ஆனா சினிமாவுக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சினைகள், எகிடுதகிடாப் போயிட்டிருக்கும் போது, ‘இப்போ இது தேவையா’ன்னு மவுனமாப் போராட்டம் நடத்தினாங்களானு யோசனை வருது. ஒண்ணும் விளங்கமாட்டேங்கிதுங்க. அதுல ஒரு ஒசந்த நடிகரு, போன தடவை போலவே இந்த முறையும் உணர்ச்சி பொங்கப் பேசினாரு. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும், நியூட்ரினோ வேணாம், ஸ்டெர்லைட்டை மூடுங்கன்னு சொன்னாரு. ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம்’னு சொன்னாரு. எதுக்காக ராணுவம் வரப்போவுது? ஏன் மத்திய, மாநில அரசுகளை விட்டுட்டு, மிலிட்டிரியைப் பத்திப் பேசினாரு? புரியலீங்களே!

2. ஐ.டி.ரெய்டு எச்சரிக்கையா?

சரி... அவருதான் பேசிட்டாரு. உடனே தாமரைக் கட்சிலே இருக்கிற அந்த ‘தமிழ்’ அம்மா, ‘ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம்னு சொல்றாரு ஒரு நடிகரு. இவங்களுக்கெல்லாம் ஏன் ராணுவத்தை அனுப்பணும். அதுக்கெல்லாம் இவங்களுக்குத் தகுதியே இல்ல. ராணுவத்துக்குப் பயப்படமாட்டாங்க. ஐ.டி. ரெய்டுன்னா பயப்படுவாங்கதானே?’ன்னு பேசுறாங்க.  பயப்படுவாங்கன்னு சொல்றாங்களா... பயப்பட வைப்போம்... ஐ.டி.யை பயன்படுத்தி, ரெய்டு வரவைப்போம்னு மிரட்டுறாங்களா? யாராவது விளக்கம் கொடுத்தா, என் தலைவலி போயிரும்!

3. சூரப்பா... நீரப்பா... யாருப்பா... ஏம்பா?

ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை எப்படி நியமிக்கணும், யார் நியமிக்கணும்னு எதுவுமே எனக்குத் தெரியாதுங்க. ஆனா இப்ப சூரப்பான்னு ஒருத்தரை நியமிச்சது சரியா? நியமிச்ச முறை சரியா? கர்நாடகத்துலேருந்து கேட்டது நீரப்பா... நீங்கள் அனுப்பியிருக்கறது சூரப்பானு வேதனையும் காமெடியுமா போயிட்டிருக்கு நம்ம ஸ்டேட்டு.

இதுல நம்ம தமிழ்நாட்டு அமைச்சர், இந்த துணைவேந்தர் நியமனத்துல எங்களுக்கு விருப்பமே இல்லைன்னு சொல்றாரு. என்னமோ போங்க!

4. வரலாம்... இப்ப வேணாம்!

நம்ம சூப்பர் ஸ்டாரு வீட்லேருந்து வெளியே வந்த உடனேயே வழக்கம் போல மைக்கை நீட்டிட்டாங்க. ‘யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எந்த ஸ்டேட்ல வேணும்னாலும் வரலாம். இருக்கலாம். வாழலாம். தப்பே இல்லை. அதான் நம்ம இண்டியா. ஆனா கர்நாடகா, காவிரி, தமிழ்நாடுன்னு இருக்கிற இந்தப் பிரச்சினையான வேளைல, அங்கேருந்து ஒருத்தர் இப்போ துணைவேந்தரா வந்திருக்கவேணாம்’னு சொல்றாரு. அவர் இப்படிச் சொன்னதும் தாமரைக் கட்சி டாக்டரம்மா, ’எங்க தமிழ்நாட்டு மக்கள், கர்நாடகக்காரரை ஏத்துக்க மாட்டோம்னு முடிவு பண்ணிருந்தா, இன்னிக்கி நீங்க சூப்பர் ஸ்டாரா ஆகியிருக்க முடியுமான்னு பஞ்ச் டயலாக்கைத் தூக்கிப் போடுறாங்க.

சினிமால அரசியல் கலக்கறதும் அரசியலே சினிமா மாதிரி அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளாப் போயிட்டிருக்கறதும், இப்ப அதிகமாயிருச்சு.

நெறய வீடுகள்ல, நியூஸ் போட்டுட்டு, கலகலன்னு சந்தோஷமா சிரிச்சு சிரிச்சுப் பாத்துக்கிட்டு, ரசிச்சு, முதுகு வலி, முதுகுல குத்துற வலின்னு எல்லாத்தையும் மறந்துட்டிருக்கான் தமிழன்! 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close