[X] Close

காங்கிரஸிலேயே இருந்து முன்பை விட வேகமாக செயல்படுவேன் -திருநாவுக்கரசர் சிறப்பு பேட்டி


congress

  • நெல்லை ஜெனா
  • Posted: 05 Feb, 2019 16:04 pm
  • அ+ அ-

காங்கிரஸிலேயே இருந்து முன்பைவிட வேகமாக செயல்படுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிய இழந்த அவர் டெல்லியில் ராகுல் காந்திய நேற்று சந்தித்தார்.

அதன் பிறகு தன் மீதானப் புகார்கள் குறித்து முதன்முறையாக ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

கேள்வி: கடந்த வருடம் மார்ச் 29-ல் உங்களை பதவியில் இருந்து மாற்ற இருப்பதாக ‘இந்து தமிழ்’ நாளேட்டில் முதன்முறையாக செய்தி வெளியான நிலையில் இப்போது திடீர் என நிகழ்ந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாநிலத்தின் தலைவர்களையும் மாற்றி வருகிறார். அந்தவகையில், எனது மாற்றமும் நிகழ்ந்துள்ளது. தமிழகக் காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றில் காமராஜர், மூப்பனார், வாழப்பாடியார் போன்றவர்களை அடுத்து அதிகமானதாக இரண்டரை வருடக்காலம் தொடர்ந்து பதவி வகித்தது எனது சாதனையாகக் கருதுகிறேன்.

கேள்வி: பாஜகவில் இருந்து வருத்தத்துடன் விலகி மகிழ்ச்சியுடன் காங்கிரஸில் சேர்வதாகக் கூறியிருந்தீர்கள். உங்களது இந்த வருத்தம் பாஜகவினருடன் நட்பாக தொடர்வதால் பதவி நீக்கப்பட்டதாகப் புகார் உள்ளதே?

பதில்: வாஜ்பாய் தலைமையில் மிகக்குறைவான வருடங்கள் பாஜகவில் இருந்த என் மீது வைக்கப்படும் தவறானப் புகார் இது. காங்கிரஸில் 10 வருடங்கள் இருந்த பின் பாஜகவுடன் நான் உறவு வைத்திருக்க முடியுமா? பாஜக அரசை எதிர்த்து கடுமையாக போராடுவதுடன் மோடியை அன்றாடம் விமர்சித்தும் வருகிறேன்.

பாஜக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மற்றவர்களை போல் எனக்கும் நண்பர்கள் இருப்பது வேறு. கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளில் உறுதியாக இருப்போமே தவிர அதில் எந்தவிதமான சமரசம் செய்து கொண்டதில்லை. என்னைப் பற்றி எந்த சொல்ல எந்த குறையும் இல்லை என்பதால் இவை என்மீது கூறப்படும் மலிவானப் புகார்கள்.

கேள்வி: பாஜகவில் இருந்து வந்த உங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளித்த காங்கிரஸ் தலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கடுமையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு பதவி அளிக்கிறது எங்கள் தலைமை. நான் 2009-ல் கட்சியில் சேர்ந்து 4 வருடம் அடிப்படை உறுப்பினராகவே இருந்தேன். பிறகு, அகில இந்திய செயலாளராக்கி தெங்கானாவிலும், ஆந்திராவிலும் மாநிலப் பொறுப்பில் இருந்தேன்.

அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை  இரண்டரை வருடம் வகித்தேன். இது என் அரசியல் அனுபவத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு பெரிய மரியாதையாகக் கருதுகிறேன். ராகுல் காந்தியை நம்பி இணைந்த எனக்கு அளிக்கப்பட்ட பதவிகளில் அவருக்கு பாத்திரமாக நான் நடந்து கொண்டேன்.

கேள்வி: மக்களவை தேர்தல் வரும் நிலையில் நெருக்கடியான காலகட்டத்தில் நிகழ்ந்த பதவி மாற்றம் அவசியமானது எனக் கருதுகிறீர்களா?

பதில்: இன்று நான் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது கூட எனது பணியை பாராட்டினார். பதவி மாற்றம் குறித்த முடிவு தலைமைக்கானது. இந்த மாற்றம் ஏன் எனத் தலைமையிடம் கேட்க முடியாது. அதை கேட்கவும் கூடாது. பதவி அளித்தவருக்கு எடுக்கும் உரிமை இல்லையா? பதவி கிடைக்கும் போது பட்ட சந்தோஷம் அதை இழந்த பின்பும் தொடர்கிறது. எனது பணியை தொடர்ந்து செய்வேன்.

கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் பதவி வகித்த காலகட்டத்தை உங்கள் தலைமையும் பாராட்டி உள்ளது. அந்த அளவிற்கு நீங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா?

பதில்: கட்சி பலமாக இருக்க அதன் கட்டமைப்பு பலப்படுத்துவது அவசியம். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் இவ்வளவு காலமான பின்பும் பலமாக இருக்கக் காரணமே அதன் கிளைகள், அமைப்புகள், பிரிவுகள் ஆகியவை. வாக்குச்சாவடி மற்றும் கிராமங்களில் துவங்கி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என அக்கட்சிகள் பலமாக உள்ளன.

இதைபோல், காங்கிரஸையும் அடிப்படையில் பலமாக்க ஏற்பட்ட அவசியத்தை நான் மாநில தலைவராக இருந்து செய்துள்ளேன். தமிழகத்தின் 67,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சியின் கிளைகளை துவக்கினோம். அதற்கான ஏஜெண்டுகளுடன், வாக்குகள் சேகரிப்பதற்கான பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நியமித்தேன்.

26 துணை அமைப்புகள் அமைத்தேன். இதில், பட்டதாரி அணி, நெசவாளர் அணி என நாட்டின் எந்த மாநிலங்களிலும் இல்லாதவற்றையும் நான் ராகுல் காந்தியின் அனுமதியுடன் துவக்கினேன். தான் நினைத்தவர்களுடன் கட்சியில் ராகுல் பேசும்படி ‘காங்கிரஸின் குரல்’ என்ற திட்டம் துவக்கி உள்ளோம். இதை துவங்கிய நான்கு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சேர்ந்து வருகின்றனர்.

25 லட்சம் உறுப்பினர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். மத்திய அரசை எதிர்த்து எங்கள் தலைமை கூறுவனவற்றை பிரச்சாரம் செய்ய தொகுதிவாரியாகப் பொதுக்கூட்டங்களும், மண்டலவாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி உள்ளோம். எனது தலைமையில் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் எழுகிறது, பலமாகிறது எனப் பேசப்படும் கட்சியாக மாற்றி உள்ளோம். மற்ற கட்சி தலைவர்களும் காங்கிரஸை பாராட்டும்படி செய்துள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 125 சொத்துக்களை மீட்டிருக்கிறோம். இதை பாராட்டிய ராகுல் காந்தி மற்ற மாநிலங்களிலும் ‘சொத்து மீட்புக்குழு; அமைத்து முடுக்கி விட்டிருக்கிறார்.    

கேள்வி: இப்படியிருக்க உங்கள் மீது சிலர் தலைமையிடம் புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்ன?

பதில்: எந்த புகாரின் அடிப்படையிலும் நான் மாற்றப்படவில்லை. எல்லா கட்சியிலும் இருப்பது போல் காங்கிரஸிலும் உள்ள சில அதிருப்தி தலைவர்கள் உள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால் ராகுல் காந்தி அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற இதை செய்திருக்கலாம். ஆனால், தான் எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்பேன் என ராகுல் காந்திக்கு தெரியும். யாரை அமைர்த்தினாலும் அவர்களுடன் இணைந்து பணீயாற்றுவேன் எனவும் அவர் அறிவார்.

கேள்வி: பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ளதா?

பதில்: தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வளர முடியாது. இந்தமுறை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவும் முடியாது. மோடி பிரதமராக தமிழகத்திற்கு புதிய தொழில், வெள்ள நிவாரணம், கஜா பாதிப்பு, முல்லைபெரியார் உள்ளிட்ட பலவற்றில் எதையுமே செய்யவில்லை.

கேள்வி: தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசலின் நிலை என்ன?

பதில்: மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் ஆங்காங்கே சிறிய அளவில் சிலருக்கு இடையே சில மனக்கசப்புகள் உள்ளன. இது அனைத்து கட்சிகளிலும் இருக்கும் ஒன்று தானே தவிர காங்கிரஸுக்கு மட்டும் புதிய விஷயமல்ல.

கேள்வி: பதவி இழப்பிற்கு பின் நீங்கள் தினகரன் கட்சிக்கு அல்லது மீண்டும் பாஜகவிற்கு தாவி விடுவீர்கள் போன்ற பேச்சுகள் எழுகிறதே?

பதில்: அர்த்தம் இல்லாத இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் எதுவும் நடக்கப்போவது இல்லை. காங்கிரஸில் தொடர்ந்து முன்பை விட வேகமாக செயல்படுவேன். திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் மாற்றுக்கட்சி தலைவர்களை பார்த்தால் மற்றவர்களை போல் தான் நான் பேசுகிறேன்.

வலுவாக அமைந்துள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுச்சேரி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்கிறேன். முதல்வராக ஸ்டாலினும், பிரதமராக ராகுல் காந்தியும் வருவார் எனக் கூறும் எனக்கு, மற்ற கட்சிகளுடன் அரசியல்ரீதியான தொடர்பிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

கேள்வி: தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் மற்றும் அவரது குழு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்: அனைவருமே எனது நண்பர்களே. அழகிரி அண்ணனுக்கும், செயல் தலைவர்கள் நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்கு எனது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

கேள்வி: இனி உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?> மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி அளிக்கும் பணியை செய்வேன். அவர் உத்தரவிட்டால் போட்டியிடுவேன். குறிப்பிடும் தொகுதியை மறுக்காமல் ஏற்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close