[X] Close

காங்கிரஸிலேயே இருந்து முன்பை விட வேகமாக செயல்படுவேன்: திருநாவுக்கரசர் சிறப்பு பேட்டி


thirunavukarasu-interview

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:26 am
  • அ+ அ-

ஆர்.ஷபிமுன்னா

காங்கிரஸிலேயே இருந்து முன்பை விட வேகமாக செயல்படுவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்த திருநாவுக்கரசர் டெல்லியில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். அதன் பிறகு தன் மீதானப் புகார்கள் குறித்து முதன்முறையாக ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

கடந்த ஆண்டு மார்ச் 29-ல் உங்களை பதவி இறக்கம் செய்ய இருப்பதாக ‘இந்து தமிழ்’ நாளேட்டில் செய்தி வெளியான நிலையில் இப்போது திடீர் என நிகழ்ந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாநிலத்தின் தலைவரையும் மாற்றி வருகிறார். அந்தவகையில், எனது மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

பாஜகவில் இருந்து வருத்தத் துடன் விலகி மகிழ்ச்சியுடன் காங்கிரஸில் சேர்வதாகக் கூறியிருந்தீர்கள். உங்களது இந்த வருத்தம் பாஜகவினருடன் நட்பாக தொடர்வதால் பதவி நீக்கப்பட்டதாகப் புகார் உள்ளதே?

குறுகிய காலமே பாஜகவில் இருந்த என் மீது வைக்கப்படும் தவறானப் புகார் இது. பாஜக அரசை எதிர்த்து கடுமையாக போராடுவதுடன் பிரதமர் மோடியை அன்றாடம் விமர்சித்தும் வருகிறேன். பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மற்றவர்களை போல் எனக்கும் நண்பர்கள் உண்டு. கட்சியின் நடவடிக்கை, கொள்கைகளில் உறுதியாக இருப்போமே தவிர அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொண்டதில்லை.

பாஜகவில் இருந்து வந்த உங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளித்த கட்சித் தலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் 2009-ல் கட்சியில் சேர்ந்து 4 வருடம் அடிப்படை உறுப்பின ராகவே இருந்தேன். பிறகு, அகில இந்திய செயலாளராக்கி தெலங்கானாவிலும், ஆந்திரா விலும் பணியாற்றினேன். அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை இரண்டரை வருடம் வகித்தேன்.

மக்களவை தேர்தல் வரவுள்ள நெருக்கடியான காலக்கட்டத்தில் நிகழ்ந்த பதவி மாற்றம் அவசியமானதா?

பதவி மாற்றம் குறித்த முடிவு தலைமைக்கானது. இந்த மாற்றம் ஏன் எனத் தலைமையிடம் கேட்க முடியாது. அதை கேட்கவும் கூடாது. பதவி கிடைக்கும்போது ஏற்பட்ட சந்தோஷம் அதை இழந்த பின்பும் தொடர்கிறது.

தலைவர் பதவி வகித்தபோது செய்த சாதனைகள் என்ன?

தமிழகத்தின் 67,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சியின் கிளைகளை துவக்கினோம். அதற்கான ஏஜெண்டுகளுடன், பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நியமித்தேன். 26 துணை அமைப்பு கள் அமைத்தேன். இதில், பட்டதாரி அணி, நெசவாளர் அணி என நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாதவற்றையும் நான் ராகுல் காந்தியின் அனுமதியுடன் துவக்கினேன்.

தான் நினைத்தவர்களுடன் கட்சியில் ராகுல் பேசும்படி ‘காங்கிரஸின் குரல்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதை துவங்கிய 4 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சேர்ந்து வருகின்றனர். புதிதாக 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.

காங்கிரஸ் எழுகிறது, பலமாகிறது எனப் பேசப்படும் கட்சியாக மாற்றி உள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 125 சொத்துக்களை மீட்டிருக்கிறோம். இதை பாராட்டிய ராகுல் காந்தி மற்ற மாநிலங்களிலும் ‘சொத்து மீட்புக்குழு அமைத்து முடுக்கி விட்டிருக்கிறார்.

இப்படியிருக்க உங்கள் மீது சிலர் தலைமையிடம் புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்ன?

எந்த புகாரின் அடிப்படையிலும் நான் மாற்றப்படவில்லை. எல்லா கட்சியிலும் இருப்பது போல் காங்கிரஸிலும் சில அதிருப்தி தலைவர்கள் உள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால் ராகுல் காந்தி அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற இதை செய்திருக்கலாம்.

பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ளதா?

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வளர முடியாது. இந்தமுறை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவும் முடியாது. மோடி பிரதமராக தமிழகத்திற்கு புதிய தொழில்கள், வெள்ள நிவாரணம், கஜா பாதிப்பு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பலவற்றில் எதையுமே செய்யவில்லை.

தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசலின் நிலை என்ன?

மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் ஆங்காங்கே சிறிய அளவில் சிலருக்கு இடையே சில மனக்கசப்புகள் உள்ளன. இது அனைத்து கட்சிகளிலும் இருக்கும் ஒன்று தானே தவிர காங்கிரஸுக்கு மட்டும் புதிய விஷயமல்ல.

பதவி இழப்புக்குப் பின் நீங்கள் டிடிவி தினகரன் கட்சிக்கு அல்லது பாஜகவுக்கு செல்வீர்கள் என்ற பேச்சு எழுகிறதே?

அர்த்தம் இல்லாத இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸில் தொடர்ந்து இருந்து, முன்பை விட வேகமாக செயல் படுவேன். திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் மாற்றுக்கட்சி தலைவர்களை பார்த்தால் மற்றவர்களை போலத்தான் நான் பேசுகிறேன். வலுவாக அமைந்துள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுச்சேரி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனக்கு, மற்ற கட்சிகளுடன் அரசியல்ரீதியான தொடர்பிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் மற்றும் அவரது குழு குறித்து தங்கள் கருத்து என்ன?

அனைவரும் எனது நண்பர்களே. கே.எஸ்.அழகிரிக்கும், செயல் தலைவர்கள் நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்கு எனது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

இனி உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ராகுல்காந்தி உத்தரவிட் டால்போட்டியிடுவேன். குறிப்பிடும் தொகுதியை மறுக்காமல் ஏற்பேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close