[X] Close

‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரம்பு மீறுகிறார்கள்; பதவி விலகத் தயார்’’ - குமாரசாமி திடீர் அறிவிப்பு


congress-mlas-crossing-the-line-hd-kumaraswamy-offers-to-quit-as-karnataka-cm

  • நெல்லை ஜெனா
  • Posted: 28 Jan, 2019 12:51 pm
  • அ+ அ-

பெங்களூரு

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரம்பு மீறுகிறார்கள், பதவி விலக தயாராக உள்ளேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத மாநில தலைவர் குமாரசாமி கடந்த மே மாதம் முதல்வராக பொறுப்பேற்றார். அமைச்சரவை பங்கீடு, துறை பங்கீடு ஆகியவற்றில் இரு கட்சி எம்எல்ஏக்களிடையே மோதல் ஏற்பட்டது.

 

அமைச்சர் பதவி கேட்டு 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், 8 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவையில் இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, சங்கர் ஆகிய இருவரையும் குமாரசாமி நீக்கினார்.

 

அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிஹோளி அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமறைவாகினர்.

ஐந்து அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை, பாஜக தலைவர்கள் மும்பையில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியானது.குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்த 2 சுயேச்சைகள், திடீரென ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். கூட்டணி அரசுக்கு எதிராக நெருக்கடி முற்றிய நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் ஹரியாணாவின் குருகிராமில் முகாமிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தினார். அதன்பின் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பீம நாயக், பி.நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், ஆனந்த் சிங், ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகியோர் பெங்களூரு திரும்பினர். இருப்பினும் குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் சித்தராமையா தான் சிறந்த முதல்வர், அவரே எங்கள் தலைவர் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை பொறுத்தவரை என்றுமே முதல்வர் சித்தராமையா தான் என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அது அவர்களின் எண்ணமாக இருந்தால் நான் பதவி விலக தயாராக உள்ளேன். அவர்கள் வரம்பு மீறி பேசுகின்றனர். இதனை சகித்துக் கொள்ள முடியாது’’ எனக் கூறினார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close