[X] Close
 

நடந்தது வன்முறை அல்ல; மத்திய அரசின் துரோகத்துக்கான எதிர்வினை: வேல்முருகன் சிறப்புப் பேட்டி 


velmurugan-interview

  • பாரதி
  • Posted: 02 Apr, 2018 16:20 pm
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உளுந்தூர்பேட்டை அருகே வாகன சுங்கச் சாவடி வசூல் மையத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் 'காமதேனு' இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி. 

உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் நேற்று உங்கள் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டது ஏன்? 
உளுந்தூர்பேட்டையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது வன்முறை அல்ல. அது மத்திய அரசின் துரோகத்துக்கு நாங்கள் ஆற்றிய எதிர்வினை. தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் செய்கை எப்படி வன்முறையாகும்? ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. 
நாங்கள் நடத்தியது வன்முறை என்றால் மத்திய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கம் வசூலிப்பதும் வன்முறைதான். சுங்கச்சாவடிகள் மேலை நாடுகளிலும் உள்ளன. ஆனால், அங்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத சாதாரண சாலைகளும் இருக்கும். ஆனால் இந்தியாவிலோ நெடுஞ்சாலைகள் அனைத்துமே சிறப்புக் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய சிறப்புச் சாலைகளாகவே உள்ளன. இது மக்கள் மீது மத்திய அரசு செலுத்தும் வன்முறைதானே. 

அப்படி என்றால் இதுபோன்ற செயல்களை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை இதுபோல் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறது. ஒருமுறைகூட நாங்கள் இப்படிச் செய்ததில்லை. முறையாக அனுமதி பெற்றே போராட்டம் நடத்தினோம். துண்டறிக்கைகள் மட்டுமே வழங்கினோம். பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் ஊழியர்கள் எங்கள் போராட்டம் நடந்தபோது சுங்கம் வசூலிக்காமல் வாகனங்களை அனுமதித்தனர். ஆனால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் மட்டும் நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதற்கான எதிர்வினையே ஊழியர்களை வெளியேற்றிவிட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கும் போராட்டம். அப்போதுகூட ஊழியர்களுக்கு எங்களால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் தொண்டர்களில் 10-க்கும் மேற்பட்டோருக்குப் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து.. 
மத்திய அரசிடமிருந்து அணுகுமுறை என்ற ஒன்று இருந்திருந்தால் இந்தப் போராட்டங்களுக்கே இடமிருந்திருக்காதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரக் காலம் உச்ச நீதிமன்ற கெடு வழங்கியபோதெல்லாம் மவுனமாக இருந்துவிட்டுக் கெடு முடியும்போது கர்நாடகா தேர்தல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றெல்லாம் காரணம் கூறுவதைவிட வன்முறை ஏதாவது இருக்க முடியுமா? 
இதைக் கர்நாடக அரசு சொல்லியிருந்தால்கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், மத்திய அரசு சொல்கிறது. அப்படி என்றால் கூட்டாட்சித் தத்துவம் எங்கே போனது? காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறும் மத்திய அரசுக்குக் காவிரி தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால் தமிழகத்தில் வன்முறை வெடிக்கக் கூடும் என்று ஏன் தோன்றவில்லை. 
'ஸ்கீம்' என்ற வார்த்தையை வைத்து மத்திய அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஸ்கீம் என்றாலே காவிரி மேலாண்மை வாரியம்தான் என்பது எங்கள் வாதம். ஆனால், இவ்வளவு காலம் அமைதி காத்த மத்திய அரசு இப்போது வந்து காவிரி கண்காணிப்பு குழு அமைக்கலாமா என்றெல்லாம் பிதற்றுவது நியாயமா? 

மத்திய அரசு ஏன் இப்படிச் செய்கிறது என நினைக்கிறீர்கள்? கர்நாடக தேர்தல் மட்டுமே காரணமா? 
மத்திய அரசின் ஒவ்வொரு செய்கைக்குப் பின்னும் ஓர் உள்நோக்கம் இருக்கிறது. காவிரி நீரைப் பெறுவது தமிழகத்தின் 7 கோடி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை. விவசாயம் செய்யமுடியாமல் 1200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். ஆனால், இதெல்லாம் மத்திய அரசுக்குத் தெரியவில்லை. 
காவிரி நீரைத் தமிழகத்துக்கு தரவேகூடாது. இங்கு விவசாயத்தை நசுக்கிவிட்டு மீத்தேன் எடுக்க வேண்டும், ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டும், நிலக்கரி எடுக்க வேண்டும், ஷேல்கேஸ் எடுக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து தமிழகத்தின் மீது வன்முறை ஏவுவதே மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. 
இது மட்டுமல்ல வேலைவாய்ப்பிலும் மத்திய அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவருகிறது. அண்மையில் என்.எல்.சி.யில் 18 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் ஒருவர்கூட தமிழர் அல்ல; ஏன் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கூட அல்ல. 
ரயில்வே தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கச் சொல்கிறது. அதில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. இதுதான் உண்மையான வன்முறை. 
வணிகவரித்துறைக்குச் சென்று பாருங்கள், இளநிலை ஊழியர் முதல் ஆணையர் வரை அனைவரும் வட இந்தியர்கள். அப்படி என்றால் இங்கே படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கிடக்கும் மண்ணின் மைந்தர்கள் நிலை என்னவாகும்? 
இத்தகைய சுரண்டல்களை எதிர்த்துத்தான் வரும் 10-ம் தேதி நெவேலியில் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறோம். 

அதிமுக, திமுக போராட்டம் குறித்து.. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை முன்வைத்து எந்தக் கட்சி போராட்டம் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். ஆனால், அந்தப் போராட்டம் உணர்வுப்பூர்வமாக இருத்தல் வேண்டும். மத்திய அரசுக்கு நெருக்கடி அளிப்பதாக இருத்தல் வேண்டும். ஆனால், அதிமுக, திமுக கட்சியினர் போராட்டம் வெறும் அடையாளப் போராட்டமாகவே எனக்குத் தெரிகிறது. 

உளுந்தூர்பேட்டை சம்பவத்துக்குப் பிறகு உங்களை 'சுங்கம் தகர்த்த சோழர்' என நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்களே.

அதை நான் சாதி ரீதியாகப் பார்க்கவில்லை. சோழர்களும் தமிழர்களே. எனவே, என்னை அந்தவகையில் ஒப்பிட்டதில் மகிழ்ச்சியே

- பாரதி ஆனந்த்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close