[X] Close

4.5 ஆண்டுகளுக்குப் பின்தான் நினைவு வந்ததோ?- பாஜகவை கிண்டல் செய்த ஒமர் அப்துல்லா


bjp-remembers-to-give-reservation-only-after-4-5-years

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jan, 2019 16:02 pm
  • அ+ அ-

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை கிண்டல் செய்திருக்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.

முன்னதாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை  திங்கள்கிழமையன்று ஒப்புதல் அளித்தது.

இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம். இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

இது குறித்து ஒமர் அப்துல்லா, "மக்களவை தேர்தல் நெருங்கவதால்தான் பாஜகவுக்கு பொருளாதரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்திருக்கிறது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தோல்வியடைந்த பின்னர், 4.5 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரே அவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து நினைவுக்கு வந்திருக்கிறது.

ஆனால், இதை உண்மையில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் அல்ல.

ஒருவேளை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனால், அப்போது நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதே கணக்கு" எனக் கிண்டல் செய்தார்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியும்கூட இது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இடஒதுக்கீடு அறிவிப்பை வரவேற்கிறேன். ஆனால் அது அறிவிக்கப்பட்ட காலம் ஐயத்தை எழுப்புகிறது எனக் கூறியிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close